16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் திட்டம் அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளதாக தொழில்நுட்பத் துறை செயலாளர் லிஸ் கெண்டல் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு குறித்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசேட ஆய்வு அறிக்கை மிக விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் நடைமுறைப்படுத்தியதை போன்ற கடுமையான சமூக ஊடகக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு, 90 சதவீதமான பெற்றோர் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்குச் சில நன்மைகள் உள்ளன என்பதைப் பெற்றோர்கள் அறிந்திருந்தாலும், அதில் தங்களது பிள்ளைகள் பார்க்கும் தேவையற்ற மற்றும் ஆபத்தான உள்ளடக்கங்கள் குறித்து அவர்கள் பெரிதும் கவலைப்படுகிறார்கள்.
இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் உதவியையும் ஆதரவையும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
இதேவேளை, அவுஸ்திரேலியா ஏற்கனவே 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ள நிலையில், தற்போதும் பல நாடுகளிலும் இத்தகைய தடைகள் நடைமுறையில் சாத்தியமா மற்றும் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த விவாதங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே தீவிரமாக எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
