ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்
கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் ஈரான் – அமெரிக்கப் போர்ச் சூழலில், உடனடியாக ஒரு திருப்புமுனை அல்லது அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
ஒரு நல்ல உடன்படிக்கை எட்டப்பட வேண்டும், இல்லையெனில் வாஷிங்டன் இந்த விவகாரத்தை “வேறு வழியில்” கையாளும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) எச்சரித்துள்ளார்.
இதேவேளை, ஈரான் விவகாரத்தில் அவசரப்பட்டு எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்ய வேண்டாம் என்று தனது பிரதிநிதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மாற்று வழிகளை ஆராய்வதற்கு முன்பாக, ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா முழு வாய்ப்பளிக்கும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை, அணுசக்தி விவகாரங்கள் குறித்துத் தற்போது பேசவில்லை என்றும், போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தே ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) இன்று தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கான ஒரு கட்டமைப்பு (Framework) எட்டப்பட்டுள்ள போதிலும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உடனடியாக சாத்தியம் என்று கூற முடியாது என அவர் குறிப்பிட்டார்.
மேலும், முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கடலோர நாடுகளுக்குச் சொந்தமான ஹொர்முஸ் நீரிணையின் மேலாண்மை குறித்த எந்தவொரு குறிப்பிட்ட விபரங்களும் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் வெளியிட்ட பதிவில்:
“ஈரான் கப்பல்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள ஹொர்முஸ் நீரிணைக்கான முற்றுகை, ஒரு முறையான ஒப்பந்தம் எட்டப்பட்டு, சான்றளிக்கப்பட்டு, கையெழுத்திடப்படும் வரை முழு வீச்சில் தொடரும்.
இரு தரப்பினரும் போதிய அவகாசம் எடுத்துக்கொண்டு, சரியான முறையில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து வருவதாக நிலவிய ஆரம்பக்கட்ட சாதகமான சூழலால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது திடீரென 5% சரிவடைந்து, கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தபட்ச விலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
