திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்று பெரம்பூரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த அவர், இன்று மாலை திருச்சி கிழக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் 2 மணியளவில் திருச்சி வந்தடையும் விஜய், சரியாக பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்களிடையே தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
திருச்சி விமான நிலையம் அருகிலுள்ள வயர்லஸ் சாலையில் தொடங்கி, கே.கே.நகர், இ.வி.ஆர். கல்லூரி சாலை மற்றும் கொட்டப்பட்டு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றவாறு அவர் வாக்கு சேகரிக்கவுள்ளார். இதற்காகத் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது, அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 27 நிபந்தனைகளுடன் இந்த பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரசாரத்தை முடித்துக் கொண்டு இரவு 7 மணிக்கு அவர் மீண்டும் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
