60 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி
அமெரிக்க ஏற்றுமதிப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக சீனா இன்று (மே 13) தெரிவித்துள்ளது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை மீறி பெய்ச்சிங் அவ்வாறு அறிவித்துள்ளது.
5,140 வகையான அமெரிக்கப் பொருள்கள் மீது 5இலிருந்து 25 விழுக்காடு வரை, கூடுதலான வரி விதிக்கப் போவதாகச் சீனா குறிப்பிட்டது.
ஜூன் 1இலிருந்து கூடுதல் வரி நடப்புக்கு வரும் என்று சீன நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஆகக் கடைசி வர்த்தகப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.
பேச்சுவார்த்தையின் இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையே இணக்கம் ஏற்படவில்லை.
பேச்சு நடந்துகொண்டிருக்கும்போதே, 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன இறக்குமதிப் பொருள்கள் மீதான வரியை 25 விழுக்காட்டுக்குத் திரு. டிரம்ப் உயர்த்தினார்.
எஞ்சியுள்ள சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன இறக்குமதிப் பொருள்கள் மீதான வரியையும் உயர்த்தத் தேவையான நடவடிக்கைகளைத் தொடங்க திரு. டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.