5 கட்சிகளின் பொது இணக்கம் குறித்து பேச விரும்புகிறோம் ; ரணிலிடம் சுரேஷ் தெரிவிப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐந்து கட்சிகள் பொதுஇணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஐ.தே.க.வின் தலைவரான உங்களையும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச மற்றும் முக்கியஸ்தர்களான மங்கள சமரவீர ராஜித சேனாரத்ன ஆகியோரை ஒன்றாக சந்தித்து பேசவிரும்புகின்றோம். இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்றுக்காலை சுரேஷ் பிரேமச்சந்திரன் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயம் தொடர்பில் ஏற்கெனவே சுமந்திரன் எம்.பி. பேசியுள்ளதாகவும் கொழும்பு திரும்பியதும் சந்திப்புக்கான ஏற்பாட்டினை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்களை தான் சுட்டிக்காட்டியதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
எங்களுடைய மக்கள் வெறுப்பு ,விரக்தி, அதிருப்தி போன்ற எல்லாவற்றுடனும் தான் இருக்கின்றார்கள். இத்தகைய நிலையில் அவர்கள் வாக்களிக்கின்ற மனநிலையில் இல்லை. கோத்தபாய ராஜபக்சவை தமிழ் மக்களுக்குப் பிடிக்காது. ஆகவே சஜித்துக்கு வாக்களிப்பார்கள் என்று நினைப்பதில் அர்த்தமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமானசுரேஷ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சந்திப்பில் எடுத்துக்கூறிய விடயங்கள் தொடர்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது
தமிழ் மக்கள் எத்தகைய மனோநிலையில் இருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் .தெரிந்திருக்கும். ஏனெனில் எங்களுடைய மக்கள் வெறுப்பு, அதிருப்தி, விரக்தி எல்லாவற்றுடனும் தான் இருக்கின்றார்கள். மூன்று வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைத் தேடி போராட்டம் செய்கின்றார்கள். நீங்கள் யாரும் இதனைக் கண்டுகொள்ளவில்லை.
அதேபோன்று காணிவிடுவிப்பு தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.இத்தகைய பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் போதும் புதிது புதிதாக பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு வருகின்றீர்கள். கன்னியாவில் முல்லைத்தீவில் எத்தகைய பிரச்சினைகள் இடம்பெறுகின்றது என்பது உங்குள்குத் தெரியும். இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு மக்களிடம் வாக்களிக்குமாறு கோரமுடியும்.வாக்களிக்கின்ற மனோபாவதில் நாங்களும்இல்லை தமிழ் மக்களும்இல்லை. உங்களிடம் பலரும் பல கருத்துக்களைக் கூறுவார்கள் உங்கள் மனதை குளிர வைப்பதற்காகவும் கருத்துக்கள் கூறுவார்கள். உண்மை அவ்வாறில்லை. சிலரிடம் கோத்தபாய ராஜபக்சவை தமிழ் மக்களுக்குப் பிடிக்காது. ஆகவே சஜித்துக்கு வாக்களிப்பார்கள் என்று நீங்கள் நம்பமுடியாது.சஜித் பிரேமதாச இங்கு வந்து ஏதும் செய்யவில்லை. அது மட்டுமன்றி உங்கள் கட்சியும் அரசாங்கமும் ஒன்றும் செய்யவில்லை. இது ஒரு புறமிருக்க சர்வதேச விமான நிலையத்தைத் திறப்பதற்காக இங்கு வந்துள்ளீர்கள்.
இங்கு வேலைவாய்ப்பிற்காக 93 தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை இணைத்துள்ளீர்கள். இது மட்டுமன்றி மின்சார சபையின் மின்மானி பரிசோதனைக்காக தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வனவிலாகா உத்தியோகத்தர்களாக தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் உள்ளார்கள். இவ்வாறு செய்து கொண்டிருக்கின்ற நிலையில் எவ்வாறு தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள்.
குறித்த விடயத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்யமுடியுமா? மேலும் அரசியல் தீர்வு என்பது வேறொரு பிரச்சினை. யுத்ததிற்கு பின்னரான சூழலில் அதிலும் இந்த அரசின் காலத்தில் இன்னும் பல புதிய பிரச்சினைகளையே உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்ற விடயத்தை எடுத்துரைத்துள்ளேன்.மேலும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சியினால் ஒன்றிணைந்த கட்சியின் தலைவர்கள் உங்களைச் சந்திக்கின்றபோது மேலும் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடமுடியும்.
இந்தச் சந்திப்பிற்கு கட்சியின் தலைவர் என்றரீதியில் நீங்களும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் மங்கள சமரவீர ராஜித சேனாரட்ண போன்றேரை ஒன்றாக சந்திப்பதற்கு விரும்புகின்றோம் எனக்கூறியிருந்தேன் இதற்குப் பிரதமர் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கூறியிருந்தார் நான் கொழும்பு சென்றதும் இதற்காக ஒரு நேரம் ஒதுக்கித் தருவதாகக் தெரிவித்தாக அவர் தெரிவித்தார்.