Main Menu

26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 பாதுகாப்பானவை என நிரூபணம் – ரஷ்ய பிரதமர்

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுவரும் 26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நாடுகளில் ஒன்றான ரஷ்யா உள்நாட்டு தயாரிப்பான 4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின், ‘நாட்டில் மொத்தம் 17 அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக 26 வகையிலான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மனித நல்வாழ்வு கண்காணிப்பதற்கான கூட்டாட்சி சேவையின் தகவலின் அடிப்படையில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளன. மேலும் இரண்டு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. இவை ஹமேல்யா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பாதுகாப்பு துறையின் கூட்டு ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மேலும் இரண்டு தடுப்பூசிகள் தொடக்க நிலை பரிசோதனையில் உள்ளன. இவை வைராலஜி, பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் மற்றும் தடுப்பூசிகள் மற்றும் சீரம் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்.

பகிரவும்...