2050 குள் உலக சனத்தொகை 200 கோடி அதிகரிக்கும் – ஐ.நா. மதிப்பீடு
எதிர்வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சனத்தொகை இன்னும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகை தற்போது 137 கோடியாகவும், சீனா மக்கள்தொகை 143 கோடியாகவும் உள்ளது.
அதன்படி, 2027-ம் ஆண்டுக்குள் சீன மக்கள்தொகையை இந்தியா பின்தள்ளுவதுடன் இந்த நூற்றாண்டில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும். 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது 770 கோடியாக உள்ள உலக சனத்தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 200 கோடி அதிகரித்து 970 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் இறுதியில் 1,100 கோடியாக உலக சனத்தொகை அதிகரிக்கும். உலக மக்கள்தொகை அதிகரிப்புக்கு இந்தியா மட்டுமின்றி, நைஜீரியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, இந்தோனேசியா, எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் முக்கிய காரணமாக இருக்கும் என ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2100 ஆம் ஆண்டு அது 11 பில்லியனை எட்டுமென்றும் உலக சனத்தொகை மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி சில நாடுகளில் மக்கள் தொகை குறையும் என்றும், அதற்கு குறைந்துவரும் குழந்தைப் பிறப்பு காரணமாக இருக்குமென்று தெரிவிக்கப்பட்டது. சில நாடுகளில், குடிமக்களின் சராசரி ஆயுள் அதிகரிப்பதால் மக்கள்தொகை அதிகரிக்கும்.
அதே நேரத்தில் சீனாவின் மக்கள் தொகை 2.2 சதவிகிதம் குறையும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
தற்போது மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 72.6 ஆண்டுகளாக உள்ளது. 2050 ஆம் ஆண்டு அது 77.1 ஆக உயருமென்று ஐக்கிய நாடுகள் சபை முன்னுரைத்தது. ஒப்புநோக்க, 1990 இல் மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 64.2 ஆண்டுகளாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.