20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா
20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் அபிப்பிராயமாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
குறித்த நிகழ்வில் சரத்பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “20 ஆவது திருத்தச்சட்டமூலம் நாட்டுக்கு ஆபத்தானது என்ற கருத்திலிருந்து நாம் மாறவில்லை. இதற்கெதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இன- மத- மொழி பேதங்களைக்கடந்து நாம் இதற்கெதிராக ஒன்றிணைய வேண்டும். இன்று 20 இற்கு எதிராக பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
அரசாங்கத்தில் உள்ளவர்களே இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள். இந்த நாட்டை ஒரு சர்வாதிகாரியிடம் ஒப்படைக்க நாம் தயாரில்லை.
இந்த திருத்தச்சட்டமூலம் நடைமுறைக்கு வந்தால், பிரதமர் பொம்மையாக மாற்றப்படுவார். இதற்காகத் தான் எதிர்க்கட்சி போராடுகிறது.
18 ஐயும் இவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தான் கொண்டுவந்தார்கள். ஆனால், 4 வருடங்களிலேயே அவர்கள் வீட்டுக்கு சென்றார்கள்.
18 இன் ஊடாக இல்லாது போன ஜனநாயகத்தை நாம் 19 இன் ஊடாக மீண்டும் கொண்டுவந்தோம். இவை அனைத்தையும் மக்கள் மறந்துவிடவில்லை. மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக நாட்டை பதாளத்திற்குள் தள்ள முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.