மணியடித்து, தர்ம போதனை கேட்கும் அதிசய நாய்!
ஹெம்மாத்தகம, மெதிலிய புராதன விகாரையில் வசிக்கும் இந்த நாயைக் காணும் எவருக்கும், இதுவொரு சாதாரண மிருகமல்ல என்ற எண்ணமே தோன்றுகிறது.
சுமார் ஆறு வயதுடைய இந்த நாய், ‘ரெக்ஸ்’ மற்றும் ‘சூட்டி புதா’ (செல்ல மகன்) ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறது.
விகாராதிபதியும் ஓய்வுபெற்ற அதிபருமான இலுக்கொட ஞானானந்த தேரரின் செல்லப்பிராணியாகச் சிறுவயது முதலே விகாரையில் வளர்ந்து வரும் இந்த நாய், நாள்தோறும் போதனைக்கு முன்னர், பக்தர்களுக்கு முன்பாகச் சென்று விகாரை மணியை ஒலிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளது.
தேரர் மணியடிப்பதை நிறுத்துமாறு கட்டளையிடும் வரை ரெக்ஸ் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது அதன் தனித்துவ பண்பாகும்.
மணியடித்து முடித்ததும் அதன் அடுத்த கடமை ஆரம்பமாகிறது.
விகாரை வளாகத்தில் ஒரு கல்லை வாயால் கவ்விக் கொண்டு வந்து விகாரைக்குள் வைத்து, தான் மணியடித்துவிட்டதைத் தேரருக்குத் தெரியப்படுத்துவது இதன் அன்றாட வழக்கமாகும்.
பௌர்ணமி தினங்கள் மற்றும் ஏனைய சமய நிகழ்வுகளின் போது, தர்ம போதனை நடைபெறும் இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்து, போதனை முடியும் வரை அதனைச் செவிமடுப்பது ரெக்ஸின் தனித்துவமான பண்பாகும். வழிபாட்டுத் தலங்களிலும் இதனை அடிக்கடி காண முடியும்.
அறநெறிப் பாடசாலை நடைபெறும் நாட்களில் சிறுவர்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும் நேரத்தைச் செலவிட ரெக்ஸ் மிகுந்த விருப்பம் காட்டுவதாக தேரர் கூறுகிறார்.
அத்துடன், விகாரையின் பாதுகாப்பு விடயத்திலும் ரெக்ஸ் மிகுந்த அவதானத்துடன் செயற்படுகிறது. தேரர் விகாரையில் இல்லாத நேரங்களில் எவரையும் தேரர் தங்குமிடத்திற்குள் நுழைய இது அனுமதிப்பதில்லை.
மேலும், தேரர் விகாரையில் இல்லாத சந்தர்ப்பங்களில், அவர் மீண்டும் திரும்பும் வரை உணவோ நீரோ கூட அருந்தாமல் இருக்கும் அளவிற்கு ரெக்ஸ் பழக்கப்பட்டுள்ளது.
விலங்கின உலகில் காணப்படும் இத்தகைய பண்பான நடத்தைகள், மனிதர்களாகிய நமக்கும் சமய பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் அன்பு குறித்த ஓர் அற்புதமான பாடத்தைக் கற்றுத் தருகின்றன.
இதுவே ரெக்ஸின் இறுதி விலங்குப் பிறவியாக இருக்கும் என்பதே ஞானானந்த தேரரின் நம்பிக்கையாகும்.
