Main Menu

ஹொங்கொங் போராட்டம் – சீனாவிற்கு வடகொரியா ஆதரவு

ஹொங்கொங் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டிற்கு வடகொரியா ஆதரவு தெரிவித்துள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, வட கொரிய தூதரக பிரதிநிதி ரி யோங்-ஹோவை நேற்று( திங்கட்கிழமை) பியோங்யாங் நகரில் சந்தித்து பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இரு அமைச்சர்களும் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் தகவல் தொடர்புகளை முன்னெடுக்க ஒப்புக்கொண்டனர்.

மேலும், ரி யோங் கூறியதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஹொங்கொங் நகரம் சீனாவினுடையதாகும். இந்த விவகாரத்தில் ஏனைய நாடுகள் தலையிடக்கூடாது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் குற்றவியல் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் முடிவு செய்தது.

இந்த சட்டமூலத்தினை முழுமையாக இரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அந்த சட்டத்தை நிறுத்தி வைப்பதாக ஹொங்கொங் தலைவர் அறிவித்தார்.

ஆனால் முழுமையாக அந்த சட்டத்தை கைவிட வலியுறுத்தியும், புதிதாக தேர்தலை நடத்தக் கோரியும் போராட்டம் தொடர்கிற நிலையில், தங்கள் உரிமையில் சீனா தேவையின்றி தலையிடுவதாகவும்  போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேவேளை வடகொரியா நடத்தி வரும் ஏவுகணை சோதனைகளை நிறுத்துமாறு 2017 ஆம் ஆண்டிலிருந்தே சீனா வலியுறுத்தி வருகின்ற நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிரிபார்க்கப்படுகின்றது.

பகிரவும்...