Main Menu

ஹெலிகாப்டர் விபத்து நடந்த 10 நிமிடத்தில் மீட்பு பணி- மு.க.ஸ்டாலினுக்கு லெப்டினண்ட் ஜெனரல் பாராட்டு

நஞ்சப்பசத்திரம் பகுதியில் லெப்டினண்ட் ஜெனரல் அருண் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்தை லெப்டினண்ட் ஜெனரல் அருண் பாராட்டிய காட்சிகுன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஏர்மார்‌ஷல் மன்வேந்திரசிங் தலை மையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை லெப்டினண்ட் ஜெனரல் அருண் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்ற அவர், அங்கு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவியவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் லெப்டினண்ட் ஜெனரல் அருண் பங்கேற்றார்.

விழாவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தும், சால்வை அணிவித்தும், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் ராணுவ வீரர்கள், தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் லெப்டினண்ட் ஜெனரல் அருண் பேசியதாவது:-

ஹெலிகாப்டர் விபத்து நடந்த தகவல் அறிந்ததும், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத்தினார். குறிப்பாக விபத்து தகவல் அறிந்த 10-வது நிமிடத்திலேயே தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரை அனுப்பி மீட்பு பணியை மேற்கொண்டார். அவருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இதேபோல் அமைச்சர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிக்கு உதவினர். ஹெலிகாப்டர் விபத்தில் உதவாதவர்கள் என்று யாரையுமே கூறமுடியாது. அனைவருமே ஓடி வந்து பல்வேறு உதவிகளை செய்து மீட்பு பணிக்கு உதவினர். அதிலும் நஞ்சப்ப சத்திரம் மக்கள் விபத்து நடந்ததும், தங்கள் பகுதியில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி தீயை அணைத்து மீட்பு பணிக்கு உதவியுள்ளனர். மேலும் தீயணைப்பு, ராணுவத்தினர் வந்த பின்னரும் அவர்களுக்கு பல உதவிகள் செய்து கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இதுபோன்ற குடிமக்கள் இருந்தால் இதே ராணுவ உடையை 5 ஆயிரம் முறை கூட அணிந்து கொண்டு நாங்கள் பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி லெப்டினண்ட் ஜெனரல் அருண் நேற்று கடிதம் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...