Main Menu

ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – முருகன்

இந்து மதத்தை எல்லை மீறி இழிவுபடுத்திய தி.மு.க தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பா.ஜ.க மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  தமிழக பா.ஜ.க  சார்பில் ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற பரப்புரையை  தமிழகம் முழுதும் ஆயிரம் இடங்களில் நடத்துகிறோம்.

இதில்  விவசாயிகளை சந்தித்து  வேளாண் திருத்தச் சட்டங்களின் நன்மைகளை எடுத்து கூறுகிறோம். இம்மாதம் 16ம் திகதி துவங்கிய பரப்புரை  வரும் 25 ஆம் திகதி வரை நடக்கிறது.

வேளாண் சட்ட நன்மைகளை எடுத்துக்கூறி தி.மு.க. வின் போலி முகத்தை மக்களுக்கு காட்டுகிறோம். எதிர்க்கட்சிகளால் பா.ஜ.க வின் நல்லாட்சியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க. உள்ளது. டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் திட்டமிடப்பட்டு அரசுக்கு எதிராக துாண்டிவிடப்பட்டுள்ளது.

தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் இப்போராட்டத்தை துாண்டி விடுகின்றனர். சில நாட்களுக்கு முன் சென்னையில் தி.மு.க. சார்பில் நடந்த கூட்டத்தில்  இந்து மதத்தை எல்லை மீறி இழிவுபடுத்தியதற்காக  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...