Main Menu

வேறு ஏதேனும் புதிய நோய்கள் வந்தாலும், அதனை வெற்றிகரமாக சமாளிக்கும் கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது – ஹர்ஷ்வர்தன்

எதிர்காலத்தில் ஏதேனும் புதிய நோய்கள் வந்தால் கூட அதனை வெற்றிகரமாக சமாளிக்கும் கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதாக மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ கொரோனா வைரஸுக்கு எதிராக கோவேக்சின்,  கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை 80 முதல் 85 சதவீதம் வரையிலான சுகாதாரப் பணியாளர்களுக்கு இவை செலுத்தப்பட்டுள்ளன. இந்த தடுப்பு மருந்துகளால் தற்போது வரை எந்த உயிரிழப்போ அல்லது கடுமையான பக்க விளைவுகளோ ஏற்படவில்லை.

அதுமட்டுமின்றி  தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளாகவே கொரோனா  வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதுவே இந்தியாவுக்கும் நமது சுகாதாரத் துறைக்கும் கிடைத்திருக்கும் உண்மையான வெற்றியாகும்.

இன்றைய சூழலில் நம் நாட்டில் 18 முதல் 19 கொரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளில் இருக்கின்றன. எனவே அடுத்த 2 – 3 மாதங்களில் புதிய கொரோனா தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

தற்போதைய வரவு செலவு திட்டத்தில் தடுப்பு மருந்துகளுக்கு மட்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஏதேனும் புதிய நோய்கள் வந்தால் கூட அதனை வெற்றிகரமாக சமாளிக்கும் கட்டமைப்பை இதன் மூலம் நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...