Main Menu

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜினாமா

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் சாரா சாண்டர்ஸ். மிக கவுரவமிக்க இந்த பதவியை வகிக்கும் 3-வது பெண் இவர் ஆவார். ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளரான இவர், ஒரு முறை, “டிரம்ப் ஜனாதிபதி ஆக வேண்டும் கடவுளே விரும்புகிறார்” என கூறியதன் மூலம் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றார்.

இந்த நிலையில், சாரா சாண்டர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த தகவலை டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்தார். இது பற்றி அவர், “3½ ஆண்டுகளாக சிறப்பான பணிக்கு பிறகு, சாரா சாண்டர்ஸ் இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார். சாரா அற்புதமான திறமைகளுடன் கூடிய மிக சிறப்பான நபர். அவர் சிறப்பான பல பணிகளை செய்திருக்கிறார். நன்றி சாரா” என தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பணியில் இருந்து விடைபெறுவது குறித்து சாரா சாண்டர்ஸ் கூறும்போது, “எனக்கு வழங்கப்பட்ட பணி என் வாழ் நாள் முழுவதும் எனக்கு அளிக்கப்பட்ட கவுரவம். நான் தற்போது எனது குழந்தைகளுடன் இருப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். நான் பணிபுரிந்த அனைத்து நேரத்தையும் விரும்பினேன். எனது துயர நாட்களையும் சேர்த்துதான்” என்றார். 

பகிரவும்...