Main Menu

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்து கொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை முதல் புதிய சட்டம் அமுல்!

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிநாட்டவர் தங்கள் நாட்டின் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த விதிகள் அமுலுக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிரஜையை இலங்கைப் பிரஜை ஒருவர் திருமணம் செய்துகொள்ளும்போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு பிரஜை ஒருவரை இலங்கை பிரஜை திருமணம் செய்துகொள்ள வேண்டுமாயின் இதற்கு முன்னர் உரிய விசா அனுமதி பத்திரம், சிவில் நிலைமையினை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பன மாத்திரம் அவசியமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...