Main Menu

வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை- மைத்திரிபால சிறிசேன

சிறிலங்காவில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நாவிடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, ஐ.நா பொதுச்செயலர், தமது சிறப்புப் பிரதிநிதியாக, நாகரீகங்களின் கூட்டமைப்புக்கான ஐ.நா உதவிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினசை, கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஐ.நா உதவசிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினஸ் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, அவர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, நிலைமைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வர துரிதமாக நடவடிக்கை எடுத்தமைக்கு சிறிலங்கா அதிபருக்கு  வாழ்த்து தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபரின் நடவடிக்கைகளை பாராட்டிய ஐ.நா உதவிச்செயலர், இஸ்லாமிய தீவிரவாதத்தை அகற்றும் இந்த முயற்சிகளுக்கு அனைத்துலக சமூகம் தோள்கொடுக்கும் என குறிப்பிட்டார்.

அத்துடன், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு நிபுணத்துவ உதவிகளை வழங்க, தீவிரவாத முறியடிப்பு நிபுணர்களின் குழுவொன்றை ஐ.நா பொதுச்செயலர் கொழும்புக்கு அனுப்பவுள்ளார் என்றும் ஐ.நா உதவிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினஸ் தெரிவித்தார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் முன்னாள் தலைவரான மிக்வேல் ஏஞ்சல் மொராடினஸ், தமது நாடான ஸ்பெய்னும் கூட 2004இல் அல்கெய்டா தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு அமைதியான நட்பு நாடுகளான சிறிலங்காவும் ஸ்பெய்னும், தீவிரவாதிகளால் இலக்கு வைக்கப்பட்டமை ஏமாற்றம் அளிக்கிறது என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிடுகையில்,  இந்த இக்கட்டான சூழலில்  ஆதரவு வழங்க முன்வந்த ஐ.நா பொதுச்செயலருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

“தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு நிபுணத்துவம் மற்றும் ஏனைய உதவிகள் தேவைப்படுகின்றன.

ஆனாலும், சிறிலங்கா படையினர் போதுமான திறனைக் கொண்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டுப் படையினர் தேவையில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...