Main Menu

வீதியில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் – வஜிர எச்சரிக்கை

வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தவணையை மீள செலுத்தும் முறையை ரணில் விக்ரமசிங்க அந்த நாடுகளுக்கு தெரிவித்திருக்கிறார்.

அதனால் அந்த முறையை யாராவது மாற்றியமைக்க முயற்சித்தால் மீண்டும் நாங்கள் அனைவரும் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அதனால் எமது நாட்டை சர்வதேச ரீதியில் மேலோங்கச்செய்ய ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதே நாட்டு மக்களுக்கு தற்போது இருக்கும் பொறுப்பாகும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

காலியில் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

ரணில் விக்ரமசிங்க என்ற தேசிய தலைவர் இந்த நாட்டை பொறுப்பேற்றதாலே வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் குறுகிய காலத்தில் மாற்றியமைக்க முடியுமாகியது.

அவர் இந்த நாட்டை பொறுப்பெற்கும்போது இருந்த நிலைமையை முற்றாக மாற்றியமைத்தார். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சர்வதேத்துடன் கதைத்தார். பொருளாதார மறுசீரமைப்பை நாட்டுக்குள் செயற்படுத்தினார்.

அதன் காரணமாக நாடு வேறு வழியில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இன்று சில அரசியல் தலைவர்கள் பல்வேறு விடயங்களை தெரிவித்தாலும் ரணில் விக்ரமசிங்க பயணிக்கும் பாதையை தவிர வேறு பாதை இல்லை.

ரணில் விக்ரமசிங்க பயணிக்கும் பாதை சர்வதேசமும் வரவேற்றிருக்கிறது. எதிர்க்கட்சி அரசியல் வாதி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது செல்லும் இந்த பாதையை மாற்றியமைப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் நாங்கள் பயணிக்கும் இந்த பாதையை சீனா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ்,  உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஜைகா நிறுவனம், இந்தியா போன்ற அனைத்து நாடுகளும் நாங்கள் பயணிக்கும் பாதைக்கு ஆதரவளித்திருக்கின்றன.

இந்த நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை செலுத்தும் முறையை ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார் 2027இல் இருந்தே கடன் செலுத்துவதாக கடன் பெற்ற நாடுகளிடம் தெரிவித்திருக்கிறார். என்றாலும் நிலைமையை சரி செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக தற்போதும் பகுதி அடிப்படையில் கடன் செலுத்தி வருகிறோம். 2027க்கு பின்னரே மொத்த கடனும் செலுத்த வேண்டும்.

கடன் செலுத்தும் முறையையும் தெரிவித்திருக்கிறோம். அதனை யாராவது மீறினால், நான் உட்பட அனைரும் மீண்டும் வீதியில் பிச்சை எடுக்க வேண்டி வரும் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதனால் எமது நாட்டை உலகுக்கு முன்னால் உயர்ந்த நிலையில் வைப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதே எம் அனைவருக்கும் தற்போதுள்ள பொறுப்பாகும். ரணில் விக்ரமசிங்க காட்டித்தந்துள்ள பாதையில் பயணித்தால் எங்களுக்கு நிச்சயமாக சர்வதேசத்துடன் முன்னுக்கு செல்ல முடியும். அதில் சந்தேகம் இல்லை என்றார்.

பகிரவும்...