Main Menu

விண்வெளிக்கு செல்கிறது பூனையின் அஸ்தி

அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தை சேர்ந்த ஸ்டன்ட் மன்ட் என்பவர், தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். ‘பிக்காசூ’ என்று பெயரிடப்பட்ட அந்த பூனையின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பூனை திடீரென செத்துவிட்டது. இதையடுத்து, அந்த பூனைக்கு வித்தியாசமான மற்றும் பிரமாண்டமான முறையில் இறுதி சடங்கு நடத்த தீர்மானித்தார்.

இதுபற்றிய நீண்ட யோசனைக்கு பிறகு, தனது பூனை உடலை தகனம் செய்து அஸ்தியை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தார். ஆனால் அவரிடம் அதற்கான வசதி இல்லை.

இதுபற்றி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரியப்படுத்தி நிதி திரட்டினார். எனினும் இதில் 1,535 டாலர் மட்டுமே வசூலானது.

இதையடுத்து தனது சேமிப்பு பணத்தையும் சேர்த்து, 5 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம்) கொடுத்து, பூனையின் உடலை தகனம் செய்து அஸ்தியை விண்வெளிக்கு அனுப்புவதற்காக ‘செலஸ்டிஸ் பெட்ஸ்’ என்ற நிறுவனத்திடம் டிக்கெட் வாங்கியுள்ளார்.

இந்நிறுவனம் செல்லப்பிராணிகளை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ‘பிக்காசூ’ பூனையின் அஸ்தி, விண்வெளிக்கு அனுப்பப்படுவது உறுதியாகிவிட்டபோதும், அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

பகிரவும்...