Main Menu

விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு ஆணையகத்தின் மற்றொரு தீர்ப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் கோரிய 90 நாட்கள் கால அவகாசம் வழங்கி, பிரித்தானிய மேன்முறையீட்டு ஆணையகம் தீர்ப்பளித்துள்ளது.

ஆணையகத்தின் இரண்டாம் கட்டத் தீர்ப்பு நேற்று (வியாழக்கிழமை) வெளிவந்த நிலையில் பிரித்தானியா கோரிய 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கின் முதல் தீர்ப்பில், பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளைத் தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உட்துறை அமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என கடந்த ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம் திகதி ஆணையகம் தெரிவித்திருந்தது.

முதல் தீர்ப்பு தொடர்பாக தீர்ப்பு வெளிவந்த அடுத்த 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆணையகத்திடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உட்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்தது.

இந்நிலையில், தமக்கு 90 நாட்கள் அவகாசம் தருமாறு ஆணையகத்திடம் பிரித்தானிய அரச தரப்புக் கோரியிருந்ததோடு, இலங்கையில் புதிய மாற்ற சூழலில் மேலும் புதிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக தனது வாதுரையில் தெரிவித்திருந்தது. இவற்றினடிப்படையில் ஆராய்ந்து முடிவை எடுக்க 90 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது.

இந்நிலையில், நேற்று வெளிவந்த ஆணையகத்தின் இரண்டாம் கட்டத் தீர்ப்பில், பிரித்தானியா கோரிய 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரித்தானிய உட்துறை அமைச்சுக்கு கொடுக்கப்பட்ட 90 நாட்கள் காலத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்விதமான பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்ற வல்லுநர்களின் அறிக்கைள்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தரப்பில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், உலகத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை உட்துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கின்ற உலகளாவிய செயற்பாடொன்றினை தொடங்கவிருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

பகிரவும்...