Main Menu

வவுணதீவு பொலிஸார் படுகொலை: கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை!

மட்டக்களப்பு, வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டமை குறித்து கைதுசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அஜந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கு அமைய இன்று (சனிக்கிழமை) காலை பதில் நீதவானின் இல்லத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொண்டுவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுடப்பட்டும், வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

இது குறித்து முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவந்தார்.

இந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதான தாக்குதல்தாரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த சர்ஹானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவில் தாங்களே பொலிஸாரை கொலைசெய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் அஜந்தனை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வீ.தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து குறித்த குற்றச் சாட்டுகளில் இருந்து விடுவித்த பதில் நீதவான் எதிர்வரும் 13ஆம் திகதி திறந்த நீதிமன்றில் சமூகமளித்து விடுவிப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் பணித்தார்

அதனைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அஜந்தன் அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டு விடப்பட்டதாக அஜந்தனின் மனைவி தெரிவித்தார்.

பகிரவும்...