Main Menu

வன்முறை அச்சுறுத்தலின் கீழ் புர்கினா பசோவில் இன்று வாக்களிப்பு

ஜிகாதி வன்முறைகளினால் இந்த ஆண்டு 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள புர்கினா பசோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் இடம்பெறுகின்றது.

இருப்பினும் இன்று தேர்தலின்போது நூற்றுக்கணக்கான கிராமங்களில் வன்முறையாளர்களினால் வாக்களிப்பு தடுக்கப்படும் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட சாதனைகளை சுட்டிக்காட்டி ஜனாதிபதி ரோச் கபோரே இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அல் கொய்தா மற்றும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புள்ள குழுக்களின் தாக்குதல்கள் அண்மையில் அதிகரித்துள்ளன. குறிப்பாக ரோச் கபோரே பதவியேற்ற மூன்று வாரங்களுக்குப் பிறகு, தலைநகரில் இடம்பெற்ற தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை கடந்த ஆண்டு கிழக்கில் சுரங்கத் தொழிலாளர்கள் மீது குறித்த குழுவினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலிலும் 39 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் வன்முறைக்கு அஞ்சி வடக்கு மற்றும் கிழக்கின் பெரும்பகுதி முழுவதும் வாக்குச் சாவடிகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு கூறுகிறது.

இதன் காரணமாக குறைந்த பட்சம் 400,000 மக்கள் – கிட்டத்தட்ட 7% வாக்காளர்கள் – வாக்களிக்க முடியாது என்று உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...