Main Menu

லண்டன் படுகொலைகளின் எண்ணிக்கை உயர்வு

லண்டனில் இந்த ஆண்டில் இடம்பெற்ற கொலைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாகவும் இந்த தசாப்தத்தில் மிக அதிகமானதாக இந்த எண்ணிக்கை அமைந்துள்ளதாகவும் பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

திங்களன்று ஹோர்ன்ஸியில் 47 வயதான ஜேம்ஸ் ஓ கீஃப் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலை 2019 ஆம் ஆண்டில் லண்டனில் நடந்த படுகொலைகளின் எண்ணிக்கையை 142 ஆக உயர்த்தியது.

கொலைகள் மற்றும் படுகொலைகளை உள்ளடக்கிய இந்த எண்ணிக்கை, 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக அதிகமான எண்ணிக்கையாக அமைத்துள்ளது. 2008 ஆம் ஆண்டில் 154 படுகொலைகளை பொலிஸார் பதிவுசெய்திருந்தனர். 2018 ஆம் ஆண்டில் மொத்தம் 133 படுகொலைகள் பதிவானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு புள்ளிவிவரத்தில் மெட்ரோபொலிற்றன் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்ட 137,பிரிட்டிஷ் போக்குவரத்து பொலிஸாரால் பதிவு செய்யப்பட்ட 2 கொலைகள் மற்றும் கடந்த மாதம் லண்டன் பிரிட்ஜில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இடம்பெற்ற 2 கொலைகள் ஆகியன அடங்கியுள்ளன.

2019 ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 23 பேர் பதின்மவயதினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களில் மிக அதிகமானவர்கள் பதின்மவயதினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...