ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரசாத லட்டு வழங்கியதில் ரூ.3.40 கோடி முறைகேடு
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரசாத லட்டுகள் வழங்கியதில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் வரை மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
கடந்த 2023-24 நிதியாண்டில் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் பக்தர்களுக்கு தினமும் இலவச லட்டு பிரசாதம் வழங்கத் திட்டம் கொண்டுவரப்பட்டு தற்போது வரை ராமேசுவரம் கோயிலில் நடைமுறையில் இருந்து வருகிறது.
முறைகேடாக விற்பனை
இதில், கோயில் பிரசாத தயாரிப்பு மற்றும் விற்பனைக்குப் பொறுப்பு அதிகாரியாக இருந்த இளநிலை உதவியாளர் கே.பஞ்சமூர்த்தி (பேஷ்கார்) தினசரி பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்து அதை முறைகேடாக விற்பனை ஸ்டால்களில் பக்தர்களிடம் விற்பனை செய்துள்ளார்.
2023 முதல் 2026 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் 11 லட்சத்து 40 ஆயிரம் லட்டுகள் முறைகேடாக தயாரித்து கவுன்ட்டரில் பக்தர்களிடம் பணத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால், ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடியாக விற்பனை நடந்ததுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பக்தர்கள் அதிர்ச்சி
மேலும், தற்காலிகப் பணியாளர்களான பிரபு ரவி, நித்தியானந்தம், பாலாஜி ஆகிய 3 பேரை பணி நீக்கம் செய்து கோயில் இணை ஆணையர் செல்லத்துரை உத்தரவிட்டார். ராமநாதசுவாமி கோயிலில் பிரசாத லட்டுவில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
