Main Menu

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு ஹோட்டல் அறையிலேயே விஷம் வைக்கப்பட்டது: ஆதாரம் சிக்கியது?

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே அவருக்கு விஷம் வைத்துக் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக அலெக்ஸி நவால்னியின் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களது குழு ஒகஸ்ட் 20ஆம் திகதி அலெக்ஸி தங்கி இருந்த ஹோட்டல் அறையில் ஆய்வு செய்தது. அதில் காலி பிளாஸ்டிக் போத்தல்கள் கிடைத்தன. அதனை நாங்கள் ஜேர்மன் ஆய்வகத்துக்கு அனுப்பினோம்.

அதன் முடிவில் அலெக்ஸி நவால்னிக்கு விமானத்தில் விஷம் வைக்கப்படவில்லை என்று எங்களுக்குத் தெரிந்தது. குடிநீர் போத்தலில் தான் விஷம் வைக்கப்பட்டுள்ளது என்று புரிந்து கொண்டோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜேர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. முன்னதாக ஜேர்மனி இராணுவ பரிசோதனை கூடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது, ரஷ்ய இராணுவம் இரசாயன ஆயுதமாக உருவாக்கிய ‘நோவிசோக்’ என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதாக தெரியவந்ததாக ஜேர்மனி கூறியது.

இதுதொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் அலெக்ஸி நவால்னியிடம் விசாரணை நடத்த ரஷ்யா முயன்று வருகிறது.

அலெக்ஸி நவல்னி, கடந்த 20ஆம் திகதி சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்ற போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பிறகு பாதுகாப்பு கருதி அவர் பெர்லிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

பகிரவும்...