Main Menu

மெக்ஸிக்கோ பகிரங்க டென்னிஸ்: முன்றாவது முறையாக மகுடம் சூடினார் நடால்!

மெக்ஸிக்கோ பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இத்தொடரில் ரபேல் நடால் சம்பியன் பட்டம் வெல்வது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக அவர் 2005ஆம் மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பலகோடி இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ரபேல் நடால், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ்சை எதிர்கொண்டார்.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், முதல் செட்டை 6-3 என ரபேல் நடால் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ரபேல் நடாலுக்கு டெய்லர் ஃபிரிட்ஸ் கடும் சவாலாக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அந்த எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கிய ரபேல் நடால், இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி 6-2 என செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்றார்.

சுமார் ஏழு வருடங்களுக்கு பிறகு மெக்ஸிக்கோ பகிரங்க டென்னிஸ் தொடரில் நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளதனை தற்போது இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பகிரவும்...