Main Menu

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் வெளியிடப்படும் – அமைச்சர் ரிஷாட்டிடம் பிரதமர் உறுதி

அரச உத்தியோகத்தர்களுக்கான சீருடைகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிரூபம் வாபஸ் பெறப்பட்டு புதிய சுற்று நிரூபம் வெளியிடப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சந்தித்து முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பில் உடன்பாடு கண்ட விடயத்திற்கு மாற்றமாகவே இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதென்றும் இதனை இரத்துச் செய்யுமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரிடம் கோரிக்கை விடுத்த போதே அரினால் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.

அத்துடன் குண்டுத்தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்களின் விடுதலை தொடர்பில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டு அது தொடர்பிலான உறுதிமொழிகள் அரச உயர்மட்டத்தினால் வழங்கப்பட்ட போதும் தொடர்ந்தும் அந்த விவகாரம் இழுத்தடிக்கப்படுவதையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரிடம் நினைவுபடுத்தினார்.

வாக்குறுதிகள் எதுவும் செயற்படுத்தப்படவில்லையென தமது விசனத்தை வெளியிட்ட அமைச்சர், தொடர்ச்சியாக முஸ்லிம்கள்  ஏதாவதொரு வகையில் வதைக்கப்படுவதாகவும் இம்சிக்கப்படுவதாகவும் பிரதமரிடம் கவலை வெளியிட்டார்.

ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததைப் போன்று முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்திலும் அலட்சியம் செய்யப்பட்டால் மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...