Main Menu

முழு அளவிலான தாக்குதல் மேற் கொள்ளப்படும்: குர்திஷ் படைகளுக்கு துருக்கி ஜனாதிபதி எச்சரிக்கை!

துருக்கியால் வடகிழக்கு சிரியாவில் உள்ள ‘பாதுகாப்பு மண்டலம்’ என கூறப்படும் பகுதியை விட்டு குர்திஷ் படைகள் வெளியேறவிட்டால், முழு அளவிலான தாக்குதல் தொடங்கும் என துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்தான்புல்லில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘எல்லைப் பகுதியில் நிலைக் கொண்டுள்ள குர்திஷ் படைகள் விதிவிலக்கு இல்லாமல் வெளியேற வேண்டும்.

இந்த வாக்குறுதி செவ்வாய்க் கிழமை மாலைக்கு முன்னதாக நிறைவேற்றப்பட்டால், பாதுகாப்பான மண்டல பிரச்சினை தீர்க்கப்படும்.
இதற்கு தீர்வு எட்டப்படா விட்டால், 120 மணிநேரத்திற்கு பிறகு தாக்குதல் தொடங்கும்;’ என கூறினார்.

வடகிழக்கு சிரியாவில் ஐந்து நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட போதும், அதனை மீறி நேற்று (வெள்ளிக்கிழமை) துருக்கி தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவம் நடந்துள்ளதன் பின்னணியில் துருக்கியின் ஜனாதிபதி தயிப் எர்டோகன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தங்கள் எல்லை பகுதியில் இருந்து குர்து இன கிளர்ச்சியாளர்களை வெளியேற்றி, பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அந்த இடத்தில் துருக்கியில் உள்ள 36 இலட்சம் துருக்கி அகதிகளை குடியமர்த்த துருக்கி திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாகவே தற்போது, துருக்கியினால் பயங்கரவாதிகள் என குறிப்பிடப்படும் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படைகளோடு துருக்கி நேரடியாக மோதலைத் தொடங்கியுள்ளது.

சிரியாவில் உள்ள ஜிகாதி குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவின் நண்பனாக செயற்பட்டது. ஆனால், நெருக்கடியான நேரத்தில் அதாவது, இந்த தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக சிரியாவில் இருந்த அமெரிக்கத் துருப்புகளை சர்ச்சைக்குரிய முறையில் அமெரிக்கா திரும்ப பெற்றது.

பகிரவும்...