முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று
2009 இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களும், அதிலிருந்து மீண்டவர்களும் அனுபவித்த இன்னல்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
இனவெறியை எதிர்த்து, தன்னாட்சி உரிமைக்காக போராடிய ஈழ தமிழர்களை கொன்று குவித்து, போர் முடித்து வைக்கப்பட்ட நாள் தான் மே.18.
நெருக்கடியான போர் சூழலில் தமிழ் மக்களின் உயிரை காப்பாற்றியது, உப்பில்லாத அரிசி கஞ்சிதான்.
எனவே முள்ளிவாய்க்காலில் ஆண்டு தோறும் இந்த சோகத்தை நினைவுகூறும் விதமாக கஞ்சி காய்ச்சி விநியோகிக்கப்படும்.
அந்த வகையில் மே.12 தொடங்கி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று வரை கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, மதுபான சாலைகள் உட்பட வர்த்தக நிலையங்களை மூடி நிறைவேந்தல் நிகழ்வினை சிறப்புற நிகழ்த்துவதற்கு ஒத்தாசை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினர் அரைகூவல் விடுத்துள்ளனர்.
பின்னணி
1983 முதல் 2009 வரையிலான உள்நாட்டு ஆயுத மோதலின் போது, இலங்கை அரசாங்கப் படைகளும் அவற்றின் ஆயுதமேந்திய அரசியல் கூட்டணிகளும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக சட்டத்திற்குப் புறம்பான கொலைகளையும், கட்டாயக் காணாமல் போதல்களையும், சித்திரவதைகளையும் செய்தன.
மேலும்,சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மோதலின் இறுதி மாதங்களில் உச்சத்தை அடைந்தன.
குறிப்பாக 2009 மே மாதத்தில், போரிடும் தரப்பினருக்கு இடையில் சுமார் 300,000 இடம்பெயர்ந்த பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர்.
இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் என்ற சிறிய கிராமத்தில்தான் இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதித் தாக்குதல் நடைபெற்றது.
ஐ.நா. மதிப்பீடுகளின்படி, இந்தத் தாக்குதலில் குறைந்தது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அதனை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று, முள்ளிவாய்க்காலில் நடைபெறும் ஒரு நினைவு நிகழ்வானது, போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரவும், நீதியையும் பொறுப்புக்கூறலையும் கோரவும், போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை ஒன்றிணைக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று, 1983 முதல் 2009 வரை இலங்கையில் நடந்த படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, டொரொன்டோ நகரில் உள்ள தமிழ் சமூகத்தினர் “முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை” அனுசரிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வு, சமூகத்தின் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மேலும், தமிழ் புலம்பெயர் சமூகம் வசிக்கும் உலகின் பல்வேறு நகரங்களிலும் இந்த நிகழ்வு நினைவு கூரப்படுகின்றது.
