Main Menu

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்புக் கொடி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

சிறுவர் தினமான இன்று (வியாழக்கிழமை) காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அண்மையில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் இணைப்பு அலுவலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

சிறுவர்களாக இருக்கும்போது பிடித்தீர்கள் தற்போது அவர்கள் இளைஞர்கள், அவர்கள் எங்கே, காலங்கள் கடக்கின்றது கண்ணீரோடு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களை போராட்டக்காரர்கள் இதன்போது ஏந்தியிருந்தனர்.

அத்துடன் கறுப்புக் கொடிகளைத் தாங்கி தமது எதிர்ப்பினையும் துக்கத்தினையும் வெளிப்படுத்தினர்.

இதேவேளை இப்போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்களை எடுத்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி வீட்டிற்கு நேற்று இரவு 8.45 மணிக்கு சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்துகின்ற வகையில் இன்றைய போராட்டம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...