Main Menu

முத்தரப்பு ரி-20 தொடர்: அயர்லாந்து அணியை வீழ்த்தியது நெதர்லாந்து!

அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் ரி-20 தொடர், தற்போது அயர்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

ரி-20 உலகக்கிண்ண தகுதி சுற்றுப் போட்டிகளுக்கான முன்னோட்ட தொடராக இத்தொடர் நடைபெறுகின்றது.

இந்த முத்தரப்பு ரி-20 தொடரில் நேற்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில், நெதர்லாந்து அணியும், அயர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.

டப்ளின் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஹரி டெக்டொர் 60 ஓட்டங்களையும், ஹென்ரிவ் பல்பிரைன் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில், பிரென்டொன் கிளோவர் மற்றும் ஷேன் ஸ்னெடர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பீய்டர் சீலர் மற்றும் பிலீப்பே போய்சேவைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 182 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நெதர்லாந்து அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் நெதர்லாந்து அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது, அணியின் அதிகபட்ச ஓட்டமாக பென் கூப்பர் ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களையும், மெக்ஸ் ஹோடவ்ட் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்து வீச்சில், ஜோர்ஸ் டொக்ரெல் மற்றும் மார்க் அடாய்ர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களை பெற்றுக்ககொண்ட பென் கூப்பர், தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த தொடரின் புள்ளி பட்டியலை பொறுத்தவரை, அயர்லாந்து 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நெதர்லாந்து 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஸ்கொட்லாந்து 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பகிரவும்...