Main Menu

மியான்மரில் ராணுவ வான்வழி தாக்குதலில் 100 பேர் பலி

மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அந்நாட்டு தலைவர் ஆங் சான்சூகி உள்பட பல தலைவர்களை ராணுவம் கைது செய்தது. ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தையும் ஒடுக்கினர். இருப்பினும் ராணுவத்துக்கு எதிராக பல அமைப்புகள் போராடி வருகின்றன. அவர்களை குறிவைத்து மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சாஜைங் பகுதியில் மியான்மர் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள் ஒன்றுகூடி உள்ளனர் என்று கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாசிகி கிராமம் அருகேராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு, தனது உள்ளூர் அலுவலகத்தை திறந்தது. இந்நிகழ்ச்சியில் 150 பேர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மீது போர் விமானம் குண்டு வீசியது. பின்னர் அரை மணி நேரம் கழித்து ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் 2021-ம் ஆண்டு ராணுவ ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 3 ஆயிரம் பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...