Main Menu

மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு 15 நாள் சிறைக்காவல்!

இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மாலைத்தீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதீபை 15 நாட்கள் சிறையில் தடுத்து வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாலைத்தீவின் ஜனாதிபதி யாமீன் அப்துல் கய்யூமை கொலை செய்வதற்கு சதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதீப் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிரான பல்வேறு ஊழல் வழக்குகளும் தொடரப்பட்டு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மாலைத்தீவு ஜனாதிபதி பதவிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாமீன் அப்துல் கய்யூம் எதிர்பாராத வீழ்ச்சியை சந்தித்தார். பின்னர், அமைந்த புதிய அரசாங்கம் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது ஆதீப்பை விடுதலை செய்தது.

அனைத்து வழக்குகளையும் மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவரது கடவுச் சீட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாலைத்தீவில் இருந்து கடந்த மாதம் 27 ஆம் திகதி ஒரு இழுவை கப்பல் தூத்துக்குடிக்கு சென்றது. இதில் மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி அகமது ஆதீப் ரகசியமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.

அவர் வரும் தகவல் பற்றி அந்த கப்பலில் இருந்து தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குறித்த இழுவை கப்பல் தூத்துக்குடி கடல் பகுதியில் வந்தபோது, கடலோர காவல்படையினர் அதனை வழிமறித்தனர்.

அதில் இருந்த மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி அகமது ஆதீபிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அந்த இழுவை கப்பலை அங்கிருந்து செல்லாமல் நிறுத்தி வைக்குமாறும், கப்பலில் இருந்து அகமது ஆதீப்பை கீழே இறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதனால் அகமது ஆதீப் தொடர்ந்து இழுவை கப்பலிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தார். உளவுப்பிரிவு பொலிஸாரும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நீண்ட விசாரணைக்கு பிறகு மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி அகமது ஆதீப் திருப்பி அனுப்பப்பட்டார். அவரை இந்திய கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் மாலைத்தீவு கடற்படையிடம் ஓப்படைத்தனர்.

பின்னர், மாலைத்தீவு தலைநகர் மாலேவுக்கு கொண்டு செல்லப்பட்ட அகமது ஆதிப்பை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

சர்வதேச கடல் எல்லையில் அவரை கைது செய்வதில் பொலிஸார் உரிய நடைமுறைகளை கடைபிடிக்காதது தொடர்பாக கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அகமது ஆதிப்பை விடுதலை செய்து உத்தரவிட்டது.

பின்னர், பொலிஸார் முறையான கைது உத்தரவை பெற்று அவரை மீண்டும் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், இந்தியாவில் அரசியல் தஞ்சம் அடைவதற்கு அகமதி அதீப் முறைப்படி முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகிரவும்...