Main Menu

மாற்று இனங்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்து: துரைரெத்தினம்

கடந்த காலங்களில் மாற்று இனங்களால் அதிகார அரசியல் ஊடாக தமிழர்கள் பலவீனமாக்கப்பட்டதைப் போல இனிவரும் காலங்களில் தமிழர்கள் காணாமல் போகும் நிலை ஏற்படலாமென முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரான இரா.துரைரெத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். துரைரெத்தினம் மேலும் கூறியுள்ளதாவது, “ஏனைய இனங்கள் உள்ள மாவட்டத்திலுள்ள தமிழர்களைப் பொறுத்தவரையில், சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் அரசியல் ரீதியாகவும், அரச நிருவாக ரீதியாகவும், அபிவிருத்தி தொடர்பாகவும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும் உள்ளூராட்சி, மாகாணசபை, நாடாளுமன்றம், ஜனாதிபதித் தேர்தல் அனைத்திலுமுள்ள அதிகாரத்தை பெறுவதற்கான உரிமைகள் தமிழ் மக்களுக்குண்டு.

இதனூடாக  அரசியல் விடயம், அரச நிருவாக விடயம், அபிவிருத்தி விடயங்களில் எமக்கான உரிமைகளைப் பெறவேண்டும்.

இவ்விடயங்களில் பார்வையாளராக தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி நாம் பார்வையாளராக இருக்கும் பட்சத்தில் குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.

மாற்று இனங்களால் அதிகார அரசியல் ஊடாக தமிழர்கள் கடந்த காலத்தில் பலவீனமாக்கப்பட்டதைப் போல இனிவரும் காலங்களில் தமிழர்கள் காணாமல் போகும் நிலை ஏற்படும்.

எனவே ஆளுந்தரப்பாக வரக்கூடிய கட்சிகளைத் தெரிவு செய்து, தமிழ் மக்களுக்கான விடயங்களை அமுல்படுத்தக் கூடியவர்களை இனம் கண்டு பேரம் பேசி அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் உள்ளது வாக்குப்பலம் மட்டுமே. அந்த வாக்குப்பலத்தை தமிழ் மக்கள் நிலையான அபிவிருத்திக்கும், அதிகாரப் பரவலாக்களுக்கும், ஏனைய இனங்களின் அடக்குமுறையில் இருந்து விடுவிப்பதற்கும், தொழில் வாய்ப்பு போன்ற விடயங்களுக்கும் சார்பாக வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள்.

மேலும் உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய சமூகம் தமிழ் சமூகம். அதிகாரம் தொடர்பாக  எந்தத்  தீர்வும் முன்வைக்கப்படவில்லை என மிகவும் வலியோடு இருக்கும் சமூகம் எமது சமூகமாகும்.

எனவே தமிழ் சமூகத்தை மீண்டும் விரக்தி நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...