Main Menu

மாபெரும் பேரணிகளை நடாத்த மஹிந்த அணி தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் மாபெரும் பேரணிகளை நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மிக முக்கிய கலந்துரையாடல் நேற்றிரவு இடம்பெற்றிருந்தது.

மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக நாடளாவிய ரீதியில் எட்டு மாபெரும் பேரணிகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இதில் நான்கு பேரணிகளுக்கு மஹிந்த ராஜபக்சவும், எஞ்சியுள்ள நான்கு பேரணிகளுக்கு கோட்டாவும் தலைமை தாங்கவுள்ளனர்.

இதேவேளை, இதன்போது பொதுஜன பெரமுனவின் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் பலவீனமாக உள்ள ஐந்து மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலேயே கட்சி நடவடிக்கைகள் பலவீனமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக குறித்த மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை தீர்மானித்துள்ளது.

அத்துடன், குறித்த மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சனத் நிஷாந்த மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பிரசன்ன ரனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த ஐந்து மாவட்டங்களுக்குமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...