Main Menu

மானிடர்களை மிரட்டும் புற்றுநோய்: அமெரிக்க ஆய்வில் 7 விதமான வழிகள் கண்டுபிடிப்பு

ஓய்வாக இருக்கும் நேரங்களில் ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மேற்கொண்டால் 7 விதமான புற்று நோய்களைத் தடுக்க முடியும் என அமெரிக்க தேசிய புற்றுநோய் கழக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னைய ஆய்வுகளிலும் உடற்பயிற்சி புற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்பது ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட வகை உடற்பயிற்சிகளை அதன் பரிந்துரைக்கப்பட்ட அளவு, நேரம் ஆகியவற்றுடன் செய்வதன் மூலம் 7 விதமான புற்றுநோய்களிலிருந்து உடலை பாதுகாக்கலாம் என இந்த புதிய ஆய்வு கூறுகிறது.

கிளினிகல் அங்கொலொஜி (Clinical Oncology) என்ற இதழில் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வுக்காக 750,000 தனிநபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த ஆய்வுகளின் படி வாரம் ஒன்றில் இரண்டரை மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை மிதமான உடற்பயிற்சி அல்லது ஒன்றேகால் மணிநேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரையிலான கடும் உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மிதநிலை உடற்பயிற்சி செயற்பாடுகள் என்பது ஒரு நபர் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்திருப்பதைக் காட்டிலும் வேகமாக நடப்பது ஓடுவது போன்ற செயல்களினால் 6 மடங்கு ஆற்றலை ஒருநிமிடத்தில் செலவிடுவது என்பதைக் குறிக்கிறது. கடும் உடற்பயிற்சிச் செயல்கள் அல்லது வேலைகளில் 6 எம்.இ.டி.க்களின் ஆற்றல் எரிக்கப்படுகிறது.

இந்தத் தரவுகளைக் கொண்டு ஆய்வு நடத்திய போது வாரம் ஒன்றிற்கு 7.5 முதல் 15 எம்.இ.டி. மணி நேரங்கள் உடற்பயிற்சி அல்லது செயல்களில் ஈடுபடுவதால் 7 விதமான புற்று நோய்கள் அண்டாது என்று கண்டுபிடித்துள்ளனர்.

பற்றுநோய் எச்சரிக்கை இன்னும் குறைய வேண்டுமென்றால் உடற்பயிற்சி நேரத்தை இன்னும் சற்றுக் கூட்டிக்கொள்ளலாம் என்கின்றனர். இதன் மூலம் ஆண்களில் பெருங்குடல் பகுதி பாதுகாக்கப்படுகிறது.

பரிந்துரைக்கப்பட்ட வாரந்த பயிற்சி முறைகளினால் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய், கிட்னி புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஆகிய எச்சரிக்கைகளும் குறைவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

750,000 நோயாளிகளை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டாலும் சில வகை புற்றுநோய்களுக்கான பங்கேற்பாளர்கள் குறைவாகவே இருந்தனர். மேலும் ஆய்வில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் வெள்ளையர்கள் என்பதும் இந்த ஆய்வின் வரம்பை நிர்ணயிக்கிறது.

பகிரவும்...