Main Menu

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள்- மு.க.ஸ்டாலின் உறுதி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை குருநானக் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- கல்விச் சேவைக்காக இக்கல்லூரி தொடங்கப்பட்டது. முதல்வர் கலைஞர் முன்னிலையில், அன்றைக்கு தமிழகத்தின் ஆளுநராக இருந்த உஜ்ஜல் சிங் அடிக்கல் நாட்டி இருக்கிறார். குருநானக்குடைய பெயரால் இந்தக் கல்லூரி தொடங்கப்படுவதால், அரசு சார்பில் 25 ஏக்கர் நிலம் அப்போது கொடையாகத் தரப்பட்டது. அதனை வழங்கியதும் தி.மு.க.வின் ஆட்சிதான். குருநானக் கல்வி அறக்கட்டளைக்கு அன்று வழங்கிய உதவியானது, வீண் போகவில்லை. அதற்கு சாட்சிதான் இந்த 50-வது ஆண்டுவிழா, இந்த சிறப்பான பொன்விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கலைஞர் தொடங்கியது எதுவும் சோடை போனதாக வரலாறு கிடையாது. அதை நீங்கள் நிரூபிப்பதைப் பார்க்கும்போது நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். நான் சென்னை மாநகரத்தின் மேயராக இரண்டு முறை பொறுப்பில் இருந்த நேரத்தில், இந்த குருநானக் கல்லூரியில் நடைபெற்றிருக்கக்கூடிய ஏராளமான நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்திருக்கிறேன். மாநகராட்சியின் சார்பில் நடந்த விழாக்கள் வேண்டுமானால் இங்கு நிறைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, அதிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது, இந்தக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிலும் நான் பங்கேற்று, இளம் பட்டதாரிகளிடையே உரை யாற்றிய நிகழ்வு இன்றைக்கும் என் நினை விலே பசுமையாக, ஆழமாக பதிந்திருக்கிறது.

இன்னும் சொன்னால், இந்த குருநானக் கல்லூரி அமைந்திருக்கின்ற இந்த வேளச்சேரி பகுதியில் தான் நான் மேயராக இருந்தபோது குடியிருந்தேன் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் மேயராக இருந்தபோது, ஒவ்வொரு நாளும் இந்த குருநானக் கல்லூரியை தாண்டித்தான் நான் போய்க்கொண்டிருந்தேன். அதுமட்டுமல்ல, இந்தக் கல்லூரியில் 7 ஆண்டு காலம் நான் நடைபயிற்சி செய்திருக்கிறேன், கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன், ஷட்டில் கார்க் விளையாடியிருக்கிறேன், அதெல்லாம் இப்போது எனக்கு நினைவிற்கு வருகிறது. இக்கல்வி நிறுவனம், தமிழக அரசுக்குப் பலநிலைகளில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கோவிட் என்று சொல்லக்கூடிய கொரோனா என்ற கொடுமையான தொற்று நோய் ஏற்பட்ட காலத்தில், பேரிடர் காலங்களில் பெரிதும் உதவி செய்யக்கூடிய, மக்களுக்கு பல வகைகளில் துணை நிற்கக்கூடிய கல்லூரிகளில் முதல் கல்லூரி எது என்று கேட்டால், குருநானக் கல்லூரியாகத் தான் இருக்கும். குருநானக் கல்லூரியின் நிறுவனர் லெப்டினன்ட் கர்னல் ஜி.எஸ்.கில் எத்தகைய நோக்கம் கொண்டதாக இக்கல்லூரி வளர வேண்டும் என்று நினைத்தாரோ அத்தகைய கல்லூரியாக குருநானக் கல்லூரியானது இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னையில் குறைவான எண்ணிக்கையில் வசிக்கக்கூடிய சீக்கிய மக்கள் இங்கு சிறுபான்மை சமூகமாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் ஆற்றிய கல்விப்பணி என்பது பெரும்பான்மையை விட மகத்தானதாக அமைந்திருக்கிறது. அனைவரும் சரிசமம் என்பதை மனதில் வைத்து அனைவரும் படிக்கும் நிறுவனமாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் தற்போதைய செயலர் மற்றும் தாளாளர் மஞ்சித் சிங் நய்யர் சிறுபான்மையினர் நல ஆணையத்தின் உறுப்பினராக இருக்கிறார். அவருக்கு அந்தப் பொறுப்பை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. கல்விப்பணி, சமூகப்பணி, குறிப்பாக பேரிடர் காலங்களில் அயராத நிவாரண உதவிகள் உள்ளிட்ட நற்பணிகளை எந்தவித எதிர்பார்ப்புமின்றி அனைவரும் பயன்பெறக்கூடிய வண்ணம் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அண்மைக்காலமாக தமிழகத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கிறபோது எனக்கு உள்ளபடியே மனவேதனையாக இருக்கிறது. கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், அந்தக் கல்வி நிறுவனங்களை தொழிலாக, வர்த்தகமாக நினைக்காமல் தொண்டாக, கல்விச் சேவையாகக் கருத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாணவச் செல்வங்கள், பட்டங்கள் வாங்குவதற்காக மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரவில்லை. முதலில் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி ஆகியவற்றை அவர்களுக்கு நீங்கள் அளிக்க வேண்டும். எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் வளர வேண்டும். உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள், அவமானங்கள், இடையூறுகள் ஆகியவற்றை மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ”பாதகம் செய்வோரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”- என்று பாடினார் மகாகவி பாரதியார். மாணவியர்க்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தொல்லை தரும் எத்தகைய இழி செயல் நடந்தாலும் தமிழ்நாடு அரசு நிச்சயமாக சொல்கிறேன், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உடனடியாக அதற்குரிய தண்டனையைப் பெற்றுத் தரும். எந்தச் சூழலிலும் தற்கொலை எண்ணத்துக்கு மாணவிகள் தள்ளப்படக்கூடாது. இந்த இடத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால் எத்தனையோ சோதனைகளைக்கடந்து தான் இங்கே நீங்கள் வந்திருக்கிறீர்கள். சோதனைகளைச் சாதனைகள் ஆக்கி வளர்ந்தாக வேண்டும். தமிழ்நாட்டு மாணவ-மாணவியர் அறிவுக்கூர்மை கொண்டவர்களாக மட்டுமல்லாமல், உடலுறுதியும் மனதைரியமும் கொண்டவர்களாக வளர வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை, என்னுடைய கனவு. அத்தகைய கல்வியை, அறிவை, ஆற்றலை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். படிப்போடு கல்வி நிறுவனங்களின் பணி முடிந்துவிடவில்லை. பாடம் நடத்துவதோடு ஆசிரியர்களின் பணியும் முடிந்து விடுவதில்லை. குழந்தைகளை பெற்றதோடு பெற்றோரின் பணி எப்படி முடியாததோ அது போல படிப்போடு ஆசிரியர் பணி முடிந்து விடாது. மாணவச் செல்வங்களே, தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலை நிமிரும் எண்ணம் தான் இருக்கவேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை. ஆசிரியர்களாக இருந்தாலும், பெற்றோர்களாக இருந்தாலும் மாணவ, மாணவியரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். மாணவர்களும், உங்களுடைய பிரச்சினைகளையும், நோக்கங்களையும், கனவுகளையும் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பிய அரசு இங்கே அமைந்திருக்கிறது. மக்கள் மனப்பூர்வமாக பாராட்டக்கூடிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களின் மூலமாக மக்களை இரு கை கொண்டு தூக்கி விடும் ஆட்சியாக இது அமைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி, நம்முடைய மாணவ சமுதாயம் வளரவேண்டும் என்று நான் மனதார கேட்டு, இந்த குருநானக் கல்லூரியில் 50-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், நானும் உங்களோடு சேர்ந்து இந்த விழாவில் பங்கேற்று, உங்கள் அனைவரையும் சந்தித்து உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி, உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுக்கள், நன்றி என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...