Main Menu

மாகாண சபைகள் மூலமோ, அரசியலமைப்பின் மூலமோ நாட்டை எவருக்கும் வழங்கப் போவதில்லை – சரத் வீரசேகர!

ஒன்பது மாகாணங்களாலும் 9 விதமான சட்டங்களை உருவாக்க முடியுமாயின், ஒரே நாடு ஒரே கொள்கை பொய்யாகிவிடும் என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை நேற்று(வெள்ளிக்கிழமை) சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்திய – இலங்கை ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. ஒரே நாடு ஒரே கொள்கை என்பதே ஜனாதிபதியின் கொள்கை என்பதால், மாகாண சபை முறைமையை எதிர்க்கின்றேன்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் படி, விடுதலைப்புலிகளை நிராயுதபாணிகளாக்குவது, மீண்டும் யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, வடக்கில் வாழ்ந்த மக்களை மீள்குடியேற்றுவது ஆகிய மூன்று நிபந்தனைகளை இந்தியாவினால் நிறைவேற்ற முடியாமற்போயுள்ளது.

குறித்த உடன்படிக்கை நடைமுறையில் இல்லாத நிலையில், மாகாண சபை முறைமைக்கு இணங்கி, மாகாண சபைகள் மூலமோ, அரசியலமைப்பின் மூலமோ நாட்டை எவருக்கும் வழங்கப்போவதில்லை.

மாகாண சபைகள் முறைமையினால் நாட்டில் உயிர்த் தியாகம் செய்த, அங்கவீனமடைந்தவர்களுக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது“ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...