Main Menu

மலேசிய பாராளுமன்ற தேர்தலில் இழுபறி- யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை

மலேசிய பாராளுமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி கலைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே அதனை பிரதமர் சாப்ரி யாகூப் கலைத்து பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி 222 இடங்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. தேர்தலில் ஐக்கிய மலேசிய தேசிய கட்சி (உம்னோ) கூட்டணிக்கும், எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான அரசியல் சீர்திருத்த அணிக்கும் இடையே தான் கடுமையாக போட்டி நிலவியது. மேலும் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணியும் களம் கண்டது. 2.1 கோடி வாக்காளர்கள் உள்ள மலேசிய தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதன் முடிவுகள் நள்ளிரவு முதல் வெளியானது. பாடாங் செராய் தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 221 தொகுதிகளில் நடந்த தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான கூட்டணி 83 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது. இஸ்மாயில் சாப்ரி யாகூப் தலைமையிலான கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 110 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை எந்த கட்சியும் தொடவில்லை. இதனால் மலேசிய புதிய அரசு அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தோல்வி அடைந்தார். 97 வயதான அவர் கடந்த 53 ஆண்டுகளில் முதல்முறையாக தோல்வியை சந்தித்தார்.

பகிரவும்...