Main Menu

மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்காவிட்டாலும் தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்: இராமதாஸ் வலியுறுத்து!

மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்காவிட்டாலும் தமிழக அரசு நீட்டிக்க முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரபரப்பாக எழுப்பப்படும் கேள்வி வரும் 14ஆம் திகதிக்குப் பிறகு ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்படுமா என்பதேயாகும்.

இந்தக் கேள்விக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் பதில் எளிமையாக இருக்க வேண்டும் என்பதை விட, எல்லோரையும் காப்பாற்றுவதாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாகும்.

ஊரடங்கு ஆணை மட்டும் பிறப்பிக்கப்படாமல் இருந்திருந்தால் அமெரிக்காவை விட இந்தியாவின் நிலைமை மோசமாக இருந்திருக்கும். இந்திய மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா பாதித்த நோயாளிகளால் நிரம்பியிருக்கும்.

அதேநேரத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நாம் இன்னும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை. அதற்கான போராட்டத்தை தொடர வேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்தில் முழுமையான வெற்றியைப் பெற அடுத்த சில வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டியது அவசியமாகும்.

எத்தனை வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பது என்பதை அடுத்த சில நாட்களில் கொரோனா பரவலின் வேகம் எந்த அளவுக்குக் குறைகிறது என்பதைப் பொறுத்துதான் தீர்மானிக்க முடியும். ஆனால், கொரோனா பரவலை முற்றிலுமாக தடுக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்பது மட்டும் உறுதி.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் பொருளாதாரம் பாதிக்கப்படும். ஏராளமானோர் வேலை இழப்பர். அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள் என்று ஒரு தரப்பினரால் எழுப்பப்படும் குரல்கள் கேட்காமல் இல்லை. இந்த இழப்புகளை எல்லாம் பின்னாளில் சரி செய்து கொள்ளலாம்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவி ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அதை யாராலும் ஈடு செய்ய முடியாது. அதனால்தான் ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக ஊரடங்கு ஆணையைச் செயற்படுத்துவதில் தமிழக அரசு நன்றாகவே செயற்பட்டு வருகிறது. ஊரடங்கு ஆணை குறித்து பிரதமர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருக்கிறார். இந்த நிலைப்பாடு நியாயமானதுதான்.

ஆனாலும், தமிழ்நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, இன்னும் ஒரு படி மேலே போய் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

ஒருவேளை மத்திய அரசே ஊரடங்கை நீட்டிக்காவிட்டாலும் கூட, தமிழ்நாட்டில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பகிரவும்...