Main Menu

கொரோனாவின் தீவிர பரவல்: உலக அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நாள்!

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தற்போது ஒவ்வொரு நாள் பொழுதிலும் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தி வருகின்றது.

உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரங்களில் அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்து 900ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

இந்நிலையில் உலக அளவில் 14 இலட்சத்து 31 ஆயிரத்து 706 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணங்கள் 80 ஆயிரத்தைக் கடந்து தற்போது 82 ஆயிரத்து 80 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு இதுவரை 3 இலட்சத்து 2 ஆயிரத்து 149 பேர் குணமடைந்துள்ள போதும், தற்போது மரணமடைவோரின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து வருகின்றமை கவலைக்குரியதாக உள்ளது.

நேற்று ஒரேநாளில் உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 380 பேர் மரணித்துள்ள நிலையில் இதுவே கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பு நிகழ்ந்த நாளாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 970 பேர் மரணித்துள்ளதுடன் புதிய நோயாளர்கள் 33 ஆயிரத்து 331 பேர் அடையாளங்காப்பட்டுள்ளனர்.

மொத்த உயிரிழப்பு 12ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, மொத்தமாக 4 இலட்சத்து 335 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவில் இதுவரை 21ஆயிரத்து 674 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோரில் 9 ஆயிரத்து 169 பேர் கவலைக்குரிய நிலையில் உள்ளமை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க மாநிலங்களில் நியூயோர்க்கில் வைரஸ் தொற்று கடுமையாகியுள்ள நிலையில் அங்குமட்டும் கடந்த 24 மணிநேரங்களில் 731 பேர் மரணமடைந்துள்ளனர்.

அங்கு ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 384 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 489ஆகக் காணப்படுகிறது.

இதையடுத்து நியூஜெர்ஸி மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரேநாளில் 229 பேர் மரணித்து மொத்த மரணம் ஆயிரத்து 232ஆகப் பதிவாகியுள்ளது.

அங்கு 44 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மிச்சிக்கன் மாகாணத்தில் ஒரு நாளில் 118 பேர் மரணித்து மொத்த உயிரிழப்பு 845 ஆகவும் மொத்த பாதிப்பு 18 ஆயிரத்து 970ஆகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய நாடான பிரான்சில் ஆயிரத்து 417 பேர் ஒரே நாளில் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளதுடன் அங்கு மொத்த உயிரிழப்பு பத்தாயிரத்தைக் கடந்து 10 ஆயிரத்து 328ஆகப் பதிவாகியுள்ளது.

பிரான்ஸில் நாளுக்கு நாள் உயிரிழப்புக்கள் ஆயிரக்கணக்கில் ஏற்பட்டுவரும் நிலையில் நேற்று மட்டும் அங்கு 11 ஆயிரத்து 59 பேர் புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டு மொத்தமாக அங்கு ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 69 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜேர்மனியிலும் கொரோனாவின் தீவிரப் பரவல் நீடித்துவரும் நிலையில் அங்கும் பல நூற்றுக்கணக்கில் மரணங்கள் ஏற்பட்டுவருகின்றன.

அந்தவகையில், இத்தாலியில் உலகளவிலேயே அதிக மரணங்கள் மொத்தமாகப் மதிவாகியுள்ள நிலையில் நேற்று மட்டும் அங்கு 604 பேர் மரணித்துள்ளனர்.

மேலும், புதிய நோயாளர்களின் வரவு குறைந்துள்ள நிலையில் புதிய நோயாளர்களாக நேற்று 3 ஆயிரத்து 39 பேர் பதிவாகியுள்ளதுடன் மொத்த வைரஸ் தொற்றாளர்கள் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 586 பேராக உள்ளனர்.

அங்கு மொத்த உயிரிழப்பு 17 ஆயிரத்து 127 ஆகப் பதிவாகியுள்ளதுடன் 24 ஆயிரத்து 392 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

இதையடுத்து, கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஸ்பெய்னில் நேற்று ஒரேநாளில் 704 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணம் 14 ஆயிரத்து 45 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், ஸ்பெய்னில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 942 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வெளியேறியுள்ளமை சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 663 பேர் தொற்றாளர்களாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நேற்று 4 ஆயிரத்து 288 பேர் புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு கடந்த 24 மணிநேரங்களில் 206 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 16 ஆகக் காணப்படுகிறது.

இதேவேளை, பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிர நிலையில் பரவியுள்ளதுடன் அங்கு நேற்று மட்டும் 786 பேர் மரணித்து மொத்த உயிரிழப்பு 6 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அங்கு 55 ஆயிரத்து 242 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, நேற்று புதிய நோயாளர்களாக 3 ஆயிரத்து 634 பேர் பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, மற்றுமொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திலும் கொரோனாவின் அதிக்கம் வலுத்துள்ள நிலையில் அங்கு அதிகமாக 403 பேர் ஒரேநாளில் மரணித்துள்ளனர். அங்கு மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளதுடன், 22 ஆயிரத்து 253 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.

இதனைவிட நெதர்லாந்திலும் கணிசமான உயிரிழப்பு நேற்று பதிவாகியுள்ளது. அங்கு நேற்று மட்டும் 234 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 101ஆகக் காணப்படுகிறது.

மேலும், 777 புதிய நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டு 19 ஆயிரத்து 580 ஆக வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனைவிட, சுவிற்சர்லாந்தில் நேற்று மட்டும் 56 பேர் மரணித்துள்ளதுடன் கனடாவிலும் 58 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. சுவிற்சர்லாந்தில் இதுவரை 22 ஆயிரத்து 253 பேர் வைரஸ் நோயாளர்களாக உள்ள கிட்டத்தட்ட 9ஆயிரம் பேர் குணமடைந்துள்ளமை பதிவாகியுள்ளது.

கனடாவில், இதுவரை 17 ஆயிரத்து 897 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை மொத்த உயிரிழப்பு 381 ஆக அதிகரித்துள்ளது.

இதனைவிட ஈரானில் தொடர்ந்தும் நூறைத் தாண்டி உயிரிழப்பு பதிவாகிவருவதுடன் நேற்று மட்டும் 133 பேர் மரணித்துள்ளனர்.

அத்துடன் அங்கு இதுவரை 3 ஆயிரத்து 872 பேர் மொத்தமாக மரணித்த நிலையில் மொத்த பாதிப்பு 62 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது.

இதேவேளை, பிரேஸிலில் நேற்று மட்டும் 122 பேர் மரணித்துள்ளதுடன், சுவீடனில் 114 பேரும், ஈக்குவேடாரில் 29 பேரும், பொலந்தில் 22 பேரும் நேற்று மரணித்துள்ள நிலையில் அயர்லாந்தில் 36 பேரும், இந்தியாவில் 24 பேரும் மெக்ஸிகோவில் அதிகபட்சமாக 31 பேரினதும் உயிரிழப்பு ஒரேநாளில் பதிவாகியுள்ளது.

பகிரவும்...