Main Menu

மட்டக்களப்பில் 1037 குடும்பங்கள் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தொற்று தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் தொற்று தடுக்கு செயலணியின் தலைவருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.என்.விஜயசேன, மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர்கள், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர், உள்ளுராட்சி மன்ற ஆணையாளர், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் உட்பட வைத்தியர்கள் என கொரோனா தொற்று தடுப்பு செயலணியின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப் பட்டுவரும் ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படவுள்ள நிலையில் அதன்போது மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் இந்த கூட்டம் நடாத்தப்பட்டது.

இதன்போது ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் போது மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையிலான நடவடிக்கையினை முன்னெடுத்தல், அனைத்து மக்களும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், வர்த்தக நிலையங்களுக்கு வரும் மக்கள் குவிந்து நின்று பொருட்களை கொள்வனவு செய்யாமல் இடைவெளியை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஊடாக முன்னெடுப்பது குறித்து இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

ஊரடங்கு தளர்த்தப்படும்போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள்,மருந்துபொருட்கள் விற்பனை நிலையங்களை மட்டுமே திறப்பது எனவும் ஆடை விற்பனை நிலையங்கள், நகை விற்பனை நிலையங்கள் உட்பட அத்தியாவசியமல்லாத பொருள்கள் விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார துறையினர் பொருட் கொள்வனவுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டு அதற்கான நேரங்களும் வழங்கப்பட்டன.

போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ்களில் 20 பேருக்கு மேல் ஏற்றுவதற்கு அனுமதிக்கூடாது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டதுடன் அது தொடர்பில் பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

முககவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்படாது என்பதுடன் அவற்றினை சுவாச நோய் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள் அணிவது கட்டாயம் என்பதுடன் தொடர்ச்சியாக ஒரே முககவசத்தினை அணிவது சுகாதாரத்திற்கு கேடு என இங்கு தெரிவிக்கப்பட்டதுடன் முககவசம் அணிவது கட்டாயமாக்கப் படமாட்டது எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

ஊரடங்கு நேரங்களில் மக்கள் வெளியில் செல்வதை முடியுமான வரை தவிர்த்துக் கொள்ளுமாறும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டில் ஒருவர் வெளியில் சென்றால் போதுமானது எனவும் இங்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார துறையினரின் செயற்பாடுகளுக்கு பாராட்டுகளை தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புகளை அனைத்து தரப்பினரையும் வழங்மாறு கேட்டுக்கொண்டார்.

நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதற்கு முன்பாகவும் அதன் பின்னரும் மக்கள் கூடும் இடங்களில் தொற்று நீக்கிகள் தெளிப்பது தொடர்பில் உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து நடவடிக்கையெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

அத்துடன் மக்கள் அதிகளவில் கூடும் பொதுச்சந்தை உள்ள பிரதேசங்களில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் வீதிகளின் கரைகளிலும் திறந்தவெளி இடங்களிலும் விற்பனை கூடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அரசாங்க அதிபரினால் உள்ளுராட்சிமன்ற ஆணையாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் 172 குடும்பங்கள் தனிப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் வெளிமாவட்டங்களில் பணிபுரிந்துவிட்டு மட்டக்களப்புக்கு வந்த 865 குடும்பங்கள் உட்பட 1037 குடும்பங்கள் வீடுகளில் தனிப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இதில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 225 குடும்பங்கள் தனிப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.பிராந்திய சுகாதார பணிமனையின் ஊடாக இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

பகிரவும்...