Main Menu

மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம், பயணம் மேற்கொள்ளவும் தடை – பாகிஸ்தான் அரசு உத்தரவு

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கவும் பயணம் மேற்கொள்ள தடையும் விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புல்வாமா உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா அறிவித்தது. சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டதையடுத்து,  அசாருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. 

மசூத் அசார் பயணம் மேற்கொள்ள தடையையும் விதித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டது. மசூத் அசாருக்கு எதிரான நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மசூத் அசார் ஆயுதங்கள் வர்த்தகத்தில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு, சீனா எதிர்ப்பு தெரிவிக்காததையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டார். 

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டது, இந்தியாவின் ராஜ்ய ரீதியிலான நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

பகிரவும்...