Main Menu

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 32-வது ஆண்டு நினைவு நாள்

அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அதிமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

மனிதாபிமானத்தின் “மகாத்மா” எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்.

எம்.ஜி.ஆர்.எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்.

1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில் நாடக நடிகராக கலைத்துறையுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

நாடகங்களில் நடித்து வந்த அவர், 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த அவர் சினிமாவில் தனக்கெனி தனி பாணியை வகுத்துக்கொண்டார்.

மக்கள் திலகத்தின் திரைத்துறை வெற்றிக்கு பிரபல தயாரிப்பாளர் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரும் வசனர்த்தா ஆரூர்தாசும் முக்கிய காரணம் ஆவார்கள். அவரது உடன் பிறந்த சகோதரர் எம்.ஜி சக்கரபாணி என்றாலும், தேவர் அவர்களுக்கு உடன் பிறவா சகோதரர் என்ற அந்தஸ்தை கொடுத்திருந்தார் என்று கூறிப்படுகிறது.

குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தேவரண்ணன் வந்தால் மட்டும் உள்ளே அனுப்புங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியதாக அண்ணன் ஆரூர்தாஸ் அவர்கள் தனது தினத்தந்தி கட்டுரையில் கூறியிருப்பதன் மூலம் தேவரின் மீது எம்.ஜி.ஆர் விலை உயர்ந்த பற்று கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.

சக கலைஞர்கள் நலனிலும் மக்கள் திலகம் பெருமளவு அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு ஆரூர்தாஸ் அவர்களே முக்கிய சாட்சி. எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது அவருக்கருகே உட்கார்ந்திருந்த ஆரூர்தாஸ், பெருமளவு வேலைப்பளு காரணமாக, அப்படியே எம்.ஜி.ஆரின் மடியில் சாய்ந்து உறங்கிய போது அவர் கண்விழிக்கும் வரை அவரை எழுப்பாமல் அன்போடு பார்த்துக்கொண்டது அவரின் உயர்வான குணத்தை காட்டுகிறது.

நாடக குழுவிலிருந்து திரைத்துறைக்கு வந்த பின் அவருக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்துக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் அண்ணாவின் எழுத்தால் கவரப்பட்ட மக்கள் திலகம் அவர்கள் திராவிட முன்னேற்ற கட்சியில் இணைந்தார்.

அண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.

1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் அவர்கள் 43065 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார்.

இத்தேர்தலில் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகளை அ.தி.மு.க அறுவடை செய்தது அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனை. அக்கட்சியை சேர்ந்த ஆனூர் ஜெகதீசன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.செம்மலை, பி.தனபால், சி. பொன்னையன், கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் கா.காளிமுத்து ஆகியோர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினர்.

1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுக-ஜனதா கூட்டணியை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து புரட்சித்தலைவரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் ஆட்சியை கலைத்த பின் நடந்த தேர்தலில் முன்னை காட்டிலும் அதிக வெற்றியை எம்.ஜி.ஆர் பெற்றார். அப்போது 177 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 129 இடங்களில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இத்தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் 21066 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் பொன்.முத்துராமலிங்கத்தை தோற்கடித்தார்.

தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.

1983 ஆம் ஆண்டு அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ஜெயலலிதா அவர்கள் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவின் தீவிர பிரச்சாரத்தால் அதிமுக அமோக வெற்றி பெற்றது.

இத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர்., 60510 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சரான பெருமை புரட்சித்தலைவருக்கு கிடைத்தது.

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றுவதற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருந்தங்களை கொண்டு வந்தார். 1982 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். மகளிருக்கு சிறப்பு பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தமிழக அரசியல் வரலாற்றில் மது விற்பனையை தடை செய்த மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் ஆவார். பழமையான கோவில்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றை புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார். சுற்றுலாத் துறையில் தமிழகம் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுத்தார்.

குறிப்பாக ஈழத்தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார். பல்வேறு வகைளில் அவர்களுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் தந்த “வள்ளல்” அவர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ந்தேதி இப்பூவுலகை விட்டு மறையும் வரை ஏழைகளின் நலனுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்த இந்த பொன்மனச் செம்மலை மனிதாபிமானத்தின் மகாத்மா என்று குறிப்பிடுவது சாலச்சிறந்தது. 

பகிரவும்...