Main Menu

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள்: அனைத்து தரப்பினரும் மரியாதை!

மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், மாணவர்களின் வழிகாட்டி என போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று நினைவுகூரப்படுகிறது.

இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலாமின் பிறந்தநானை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கலாம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “டாக்டர் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் அவர். இது ஒருபோதும் மறக்க முடியாது. அவரது வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், “’புதிய மற்றும் வலிமையான இந்தியா’ என்ற கனவை நனவாக்குவதற்காக, நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்காக கலாம் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். அவர் தொடர்ந்துவரும் நம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பார். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவரும், இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை கட்டமைத்தவருமான டாக்டர் கலாம் எப்போதும் வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க விரும்பியதாக உட்துறை அமைச்சர் அமித் ஷா தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்குவதாகவும், தனது விசாலமான பார்வை மற்றும் மனிதநேயத்திற்காக பணியாற்றி உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்திய மக்கள் ஜனாதிபதியாக அவர் நினைவுகூரப்படுகிறார் என்றும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

இதேவேளை, கலாமின் பிறந்தநாளில் அவரது நினைவுகளை சமூக வலைத்தளங்களில் அனைவரும் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...