Main Menu

பொதுக்குழு உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கடிதம்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகி இருக்கும் பரபரப்பான சூழலில் வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க. பொதுக்குழுவில் மொத்தம் 2,665 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உள்ளனர். இந்த ஆதரவு பலத்துடன் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமை பதவியை கைப்பற்ற உள்ளார். மொத்தம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே 2,432 பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவினார்கள். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு 2,441 ஆக அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையே மீதம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களிலும் பெரும்பாலானவர்கள்

இன்னும் சில தினங்களில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தே காணப்படுகின்றன. இதற்காக எடப்பாடி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களாக உள்ள பொதுக்குழு உறுப்பினர்களிடம் பேசி வருகிறார்கள். இதன் மூலம் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வருகிற 11-ந்தேதிக்குள் ஒரு சிலரை தவிர அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுமே எடப்பாடி பழனிசாமியின் பக்கம் வந்து விடுவார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமியை கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்வது தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தனித்தனியாக கையெழுத்து போட்டு ஆதரவு கடிதம் அளிக்க வேண்டும். இதற்கான பணிகளும் நடந்து முடிந்துள்ளன. எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. ஒற்றை தலைமை பதவிக்கு தேர்வு செய்வது தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு ஆதரவு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்பட இருப்பது 100 சதவீதம் உறுதியாகி இருப்பதாக அவரது ஆதரவு மாவட்ட செயலாளர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 24-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்படும் தீர்மானமும் அதில் இடம் பெற்றிருந்தது. இந்த தீர்மானத்தை தவிர மற்ற தீர்மானங்களை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வரும் ஒற்றை தலைமை தீர்மானமும் முக்கிய தீர்மானமாக பொதுக்குழுவில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுகிறார். பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக தேர்வானதும் அதனை வெற்றிக் கொண்டாட்டம் போல் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்கனவே காலாவதியாகி விட்டதாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.

தற்போது அ.தி.மு.க. பொருளாளர் பதவியில் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார். அந்த பதவியையும் பறித்து ஓ.பன்னீர்செல்வத்தை முழுமையாக ஓரம் கட்டவும் எடப்பாடி பழனிசாமி அணியினர் காய் நகர்த்தி வருகிறார்கள். இது தொடர்பாகவும் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கட்சியை வழி நடத்தி வந்தார். இந்த நிலையில் ஒற்றை தலைமை கோஷம் வலுவடைந்ததை தொடர்ந்து இரட்டை தலைமை முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த கட்டமாக பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தின் கை வீழ்ச்சியை சந்தித்து இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. தலைமை பதவி ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து கை நழுவிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் அது தொடர்பான பரபரப்பு இப்போதே பற்றிக் கொண்டுள்ளது.

பகிரவும்...