Main Menu

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

எழிலகத்தில் அமைந்துள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

உடனடியாக அன்றைய தினமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதிக்கும், தென்சென்னை பகுதிக்கும் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

மழை நீரில் நடந்து சென்றும் மக்களிடம் குறை கேட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளை பார்வையிட்ட அவர் நேற்றும் மழை சேத பகுதிகளை பார்வையிட்டார். கொளத்தூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், போரூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்றார். போரூர், ரெட்டேரி பகுதிகளையும் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார்.

மெரினா கடற்கரை சாலையில் உள்ள எழிலகத்தில் அமைந்துள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.15 மணியளவில் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அவரை பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வரவேற்று கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார்.

கடும் மழையை எதிர்கொள்ள என்னென்ன முன் ஏற்பாடுகள் எடுத்துள்ளனர் என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அங்குள்ள ஊழியர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவரம் கேட்டறிந்தார். ஒவ்வொரு ஊரில் இருந்தும் வரும் தொலைபேசி அழைப்புக்கு எவ்வாறு பதில் அளிக்கின்றனர் என்பதையும் பார்த்தார்.

அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அகிலா என்ற பெண் மழை நீர் வடியாதது குறித்து தகவல் தெரிவித்து கொண்டிருந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  அந்த ஹெட்போன் தொலைபேசியை வாங்கி தனது காதில் பொருத்தி அந்த பெண்ணிடம் பேசினார்.

வணக்கம் அம்மா! நான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன். எங்கிருந்து பேசுகிறீர்கள். உங்கள் பெயர் என்ன? என்று கேட்டார்.

அதற்கு அந்த பெண் தனது பெயர் அகிலா என்றும் எங்கள் பகுதியில் மழை நீர் வடியாமல் உள்ளது என்றார்.

அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் , “நான் பார்க்க சொல்கிறேன். நீங்கள் சொன்ன தகவலையும் இங்கு பதிவு செய்துள்ளனர். உங்கள் பகுதியை கட்டாயம் நான் பார்க்க சொல்கிறேன். உடனே நடவடிக்கை எடுப்பார்கள்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள ஏற்பாடுகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று இரவு அதிக அளவு மழை பெய்துள்ளதாகவும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்ததாகவும் தெரிவித்தனர்.

சென்னையில் மழை குறைவாக பெய்ததாகவும் கூறினார்கள். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் , “நேற்று மழை பெய்யாத மாவட்டம் உண்டா?” என்று கேட்டார். அதற்கு அதிகாரிகள் “எல்லா மாவட்டத்திலும் மழை பெய்துள்ளது” என்று தெரிவித்தனர்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறும் போது, “பயிர் சேத விவரங்களை கணக்கெடுக்க சொல்லி உள்ளோம். வருவாய்த்துறையினரும், விவசாய அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறி உள்ளோம். மழை நீர் வடிந்த பிறகு முழு கணக்கெடுப்பும் நடத்தியும் அறிக்கை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

இதை கேட்டுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் கட்டுப்பாட்டு அறையில் ஆலோசனை நடத்திய பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பகிரவும்...