Main Menu

பேனர் விழுந்து இதுவரை 34 பேர் இறந்துள்ளனர்- டிராபிக் ராமசாமி தகவல்

பேனர் விழுந்து இப்போது சுபஸ்ரீ இறந்திருப்பது முதல் சம்பவம் அல்ல என்றும் ஆவடி, பெரம்பூர், கோவை, திருச்சி உள்பட பல இடங்களில் இதுவரை பேனர் விழுந்து 34 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்றும் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அ.தி.மு.க. பிரமுகர் வைத்த பேனர் விழுந்ததில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக சென்னையை சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.

இதுதொடர்பாக டிராபிக் ராமசாமி கூறியதாவது:-

பேனர் விழுந்து இப்போது சுபஸ்ரீ இறந்திருப்பது முதல் சம்பவம் அல்ல. ஆவடி, பெரம்பூர், கோவை, திருச்சி உள்பட பல இடங்களில் இதுவரை பேனர் விழுந்து 34 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

12 வருடங்களுக்கு முன்பு போராட தொடங்கினேன். 2007-ம் ஆண்டு அப்போதைய தலைமை செயலாளர் பேனர் வைப்பது தொடர்பாக ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், ஒரு நிகழ்ச்சி நடப்பதற்கு 3 நாள் முன்னதாக பேனர் வைக்கலாம். நிகழ்ச்சி முடிந்து 2 நாளில் அதை அகற்றிவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதை எதிர்த்து அப்போதிலிருந்தே நான் போராடி வருகிறேன். பேனர் வைப்பதை தடை செய்யும் அதிகாரம் கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் முறையாக அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. பேனர் வைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு மட்டுமல்ல ஆபத்தும் ஏற்படுகிறது.

இந்த வி‌ஷயத்துக்கு தீர்வு காண கோர்ட்டை அணுகினேன். இதுவரை 200 வழக்குகள் போட்டுள்ளேன். முழு தீர்வு ஏற்படவில்லை. இதற்கு முடிவு ஏற்படும் வரை நான் விடப்போவது இல்லை.

பேனர் விவகாரத்தை எதிர்ப்பதால் ஏராளமான பிரச்சனைகளை நான் எதிர்கொண்டு வருகிறேன்.

கடைசியாக சென்னை கடற்கரையில் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைப்பதற்கு பேனர் வைத்ததை எதிர்த்தேன். அப்போது கட்சி பிரமுகர்கள் என்னை செருப்பால் அடித்தார்கள். இதுபோல பல சம்பவங்களை நான் எதிர்கொண்டு இருக்கிறேன்.

1952 முதல் 1954 வரை நான் அப்போதைய தமிழக மந்திரி வெங்கடசாமி நாயுடுவிடம் உதவியாளராக பணியாற்றினேன். அப்போது முதல்-மந்திரியாக இருந்த ராஜாஜி எனது வீட்டு விழாவிற்கு வந்திருந்தார். அப்போது அவர் உனது மனசாட்சி படி நீ எப்போதும் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

அதிலிருந்து நான் எனது மனசாட்சி படி செயல்பட்டு வருகிறேன். பேனர் கலாச்சாரம் என்பது இப்போது எல்லா இடத்திலும் பரவி விட்டது. நான் தொடர்ந்து அதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் ஜவுளிக்கடை முன்பு வைத்திருந்த பேனரை அகற்றினேன். அடுத்த நாள் வடபழனியில் கோவில் விழாவுக்காக பேனர் வைத்திருந்தார்கள். கடவுள் பேனர் வைக்க சொன்னாரா? இவை எல்லாம் நிறுத்தப்பட வேண்டும்.

பேனர் கலாச்சாரத்துக்கு அரசியல்வாதிகளை மட்டுமே குறை சொல்லக்கூடாது. இதற்கு போலீசார் தான் காரணம். அவர்கள் முறையாக சட்டத்தை அமல்படுத்தினால் இதுபோன்ற நிலை ஏற்படாது.

அரசியல்வாதியாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி பேனர் வைப்பது என்பது சட்டவிரோதமானது. அவ்வாறு அதை மீறி வைத்தால் போலீசார் அவற்றை அகற்ற வேண்டும். மேலும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

ஒரு பேனரை அச்சிடுவதற்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அதாவது பேனரை அச்சிடுவதற்கு அனுமதி அளித்த அதிகாரி யார்? யார் அச்சிடுகிறார்கள் என்ற அனைத்து விவரங்களையும் பேனரில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய விடாமல் அச்சகத்தினரை அரசியல் வாதிகள் மிரட்டுகிறார்கள்.

இந்த விதிமுறைகளை பின்பற்றினால் கலாச்சாரத்தை ஒழித்துவிட முடியும். தற்போது சில அரசியல் தலைவர்கள் பேனருக்கு எதிராக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அவர்கள் அதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். என்னை பைத்தியக்காரன், கோமாளி என்றெல்லாம் கேலி செய்தவர்கள் இப்போது உணர்ந்து இருக்கிறார்கள்.

சுபஸ்ரீ.

சுபஸ்ரீ இறந்ததை அடுத்து வலுவான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். மக்களிடமும் விழிப்புணர்வு வரவேண்டும். மிக கடுமையாக நடவடிக்கை எடுத்த நீதியரசர்களுக்கு பாராட்டுக்கள். சுபஸ்ரீயின் மரணத்தோடு இந்த கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

பகிரவும்...