Main Menu

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்த எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தவறானது- மத்திய நிதி மந்திரி விளக்கம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வரிகளை குறைத்து சமானிய மக்களின் மீதான சுமையை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமன், பெட்ரோல் பங்க்புது தில்லி:
நாடு முழுவதும் 137 நாட்களுக்கு பிறகு  கடந்த 22-ந்தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. 
இந்நிலையில் அண்மையில் முடிவடைந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்காகவே மத்திய அரசு, பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருந்ததாகவும், தற்போது தேர்தல் முடிவடைந்ததால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும்,  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

இதை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த அவர்,  எரிபொருள் விலை உயர்வு ஐந்து மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களுடன் தொடர்புடையதல்ல என்று கூறியுள்ளார்.
உக்ரைனில் ரஷியா மேற்கொண்டுள்ள போர் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலி முற்றிலும் சீர்குலைந்துள்ளதால், அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த போரால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரிய நாடுகளிடையே நடைபெற்ற போரால் இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியிருந்ததை ஏற்க முடியும் என்றால், தற்போதைய சூழ்நிலையை நாங்கள் ஏன் கூற கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வரிகளை குறைத்து சமானிய மக்களின் மீதான சுமையை குறைக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி இழப்பீடு விவகாரத்தில் அரசியல் செய்வதையும் எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவின்படி ஒவ்வொரு மாநிலமும் இழப்பீடு பெறுகிறது என்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பகிரவும்...