Main Menu

புயல் எச்சரிக்கையையும் மீறிச் சென்றதால் விபரீதம்: அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி!

அமெரிக்காவில் புயல் எச்சரிக்கையையும் மீறி பறந்து சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் பலியானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் தற்போது கடுமையான புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எச்சரிக்கையை மீறி பறந்து சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதன் விமானி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு புலனாய்வாளர்கள் வருவதாகவும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (என்.டி.எஸ்.பி) விசாரணைக்குப் பொறுப்பாகும் எப்ஏஏ அறிவித்துள்ளது.

விபத்து குறித்து மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் ட்விட்டரில் கூறுகையில், ”நேற்றிரவு தெற்கு டகோட்டாவில் உள்ள சேம்பர்லேன் விமான நிலையத்திலிருந்து பிலாடஸ் பிசி -12 என்ற ஒற்றை இன்ஜின் டர்போபிராப் விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது அங்கு குளிர்கால புயல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. விமானப் போக்குவரத்துக்குச் சாதகமில்லாத ஒரு வானிலை நிலவியது. இந்த விமானத்தில் 12 பேர் இருந்தனர்.

மேற்கு மாநிலமான இடாஹோவில் உள்ள இடாஹோ நீர்வீழ்ச்சி பிராந்திய விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காகச் சென்ற இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே அதாவது நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 1 மைல் தொலைவிலேயே விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இதில் ஒற்றை இன்ஜின் டர்போபிராப் விமானத்தின் விமானியும் பலியானார்’’ என்று தெரிவித்துள்ளது.

இவ்விமானத்தில் 9 பேர் மட்டுமே அமரக்கூடிய இடவசதி இருந்ததாகவும் சிறிய ரக விமானத்தில் 12 பேர் ஏற்றிச்செல்வது கூடுதல் பளு என்றும் சமூக வலைதளங்களில் சிலர் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

உயிர் தப்பிய மூன்று பேர் சியோக்ஸ் நீர்வீழ்ச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக புரூல் கவுண்டி மாநிலத்தின் வழக்கறிஞர் தெரசா மவுல் ரோஸ்ஸோ கூறினார்.

பகிரவும்...