Main Menu

புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியால் செயற்பட முடியும்: ஐரோப்பிய மருந்துகள் முகமை!

கொரோனா வைரஸின் புதிய வகை வளர்ச்சிக்கு எதிராகத் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியால் செயற்பட முடியும் என ஐரோப்பிய மருந்துகள் முகமை நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா வைரஸ், தீவிரமாக பரவி வருகின்றது.

இதனால், அந்த நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

இந்த நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ஏற்கெனவே கொரோனாவுக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் நிலைமை என்ன? அவை செயற்படுமா என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்தது.

அதற்குப் பதில் அளித்துள்ள ஐரோப்பிய மருந்துகள் முகமை (ஈ.எம்.ஏ) தலைவர் எமர் குக், ‘கொரோனா வைரஸின் புதிய வளர்ச்சிக்கு எதிராகத் தற்போது கண்டுபிடித்துள்ள தடுப்பூசியால் செயற்பட முடியும். மேலும், தடுப்பூசிகள் புதிய வகை கொரோனா வைரஸ் வளர்ச்சிக்கு எதிராகச் செயற்படாது என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் திங்கள் கிழமையன்று ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...